Freitag, Juli 20, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் :பகுதி3

நேசம் நிறைந்தோரே!,
இந்த நூல் விமர்சனத்தூடாக நாம் எதிர்கொள்ளும் உண்மையானது நமது மக்களது மட்டுமல்ல ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் தமது விலங்கை ஒடிப்பதற்கானவொரு நிபந்தனைக்கு முன் வந்தாகவேண்டும் என்பதையே புதைத்து வைத்திருக்கிறது.முள்ளி வாய்க்காலில் செய்யப்பட்ட "சமரசம்-காட்டிக் கொடுப்பானது" இலங்கையில் தமிழ் பேசும் மக்களது அடிமை விலங்கை உறுதிப்படுத்தியது.புலிகள், தம்மால் தமிழினத்தை வேட்டையாடியது போதாதென்று தமது எஜமானரையும் வேட்டையாடும்படி செய்யும் இன்றைய அரசியலை நாம் புரிந்தாகவேண்டுமா-இல்லையா?

அந்தச் செயற்றிட்டமானது-புரிதலது போக்கானது மனித இருப்புக்கான நிபந்தனையாகும்.

"போராட்டம் என்பது மகிழ்ச்சியானது" என்று மார்க்ஸ் கொண்ட கொள்கையால் தனது குடும்பத்தையே அதற்காக அர்பணித்துக்கொண்டார்.

மாபெரும் தியாகிகளது குருதியிலும்,சாவிலுமே நாம் ஓரளவு சுதந்திரப்பிரஜைகளாக இப்போது நடமாடக்கூடியதாக இருக்கிறது.

8.மணி நேரம் உழைப்பு,8 மணி நேரம் ஓய்வு.8 மணி நேரம் உறக்கம் என்பதை இத்தகைய தியாகிகளது உயிர்க்கொடையின் மூலமே நாம் அநுபவிக்கின்றோம்.

இந்த நூல் விமர்சனமென்பது எமது வரலாற்றைத் தெளிவுறக் கற்பதற்கும்,அதிலிருந்து உண்மையான தியாகிகளை இனம் கண்டு,எமது மக்களது விலங்கை நாம் அனைவருமே ஒன்று சேர்ந்து உடைப்பதில் மக்களோடு மக்களாகத் தோள் சேரும்போது அந்நிய ஏஜென்டுகளை-அவர்கள் நம்மைப்போல்,நாமாக இருப்பதைக் கண்டுகொள்வதன் வாயிலாக, ஒரு புதிய விடிவுக்கு நாம் துணைபோவதற்காக இத்தகைய எதிரிகளை முதலில் முறியடிப்பதற்கு முனையவேண்டும்.

தமிழரசன்,மிக முன்னேறிய போராட்டச் சிந்தாந்த வாதியும்,சிறப்பான வரலாற்று அறிவாளனுங்கூட.

அவரது அநுபத்தை உட்செரிப்பதும்,அதன் வாயிலாக நாம்,நமது எதிரிகளைப் பல "தமிழ்ப் படைப்பாளிகள்-போராளிகள்,தமிழ் உணர்வாளர்கள்" எனும் வடிவில் எதிர்கொள்வோமாயின் அவர்களைக் களையகற்றுவதுபோல் அகற்றி, முன் செல்லவே இந்த விமர்சனத்தைத் தமிழரசன் தருகிறார்.

தொடர்ந்து அறிய முற்படுங்கள்.

விசாரிக்கக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக நாம் இருப்பதால் நீங்களும் அதன் வழியில் நடை போடலாமே!

அன்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.07.12

3:

கடந்த இரு பகுதிகளில் நீங்கள் ஓரளவு வரலாற்றியக்கத்தைத் தரிசிக்க முடிந்திருக்கும்.வல்வெட்டித்துறையைக் குறித்து மிக நீண்ட புரிதலும் அவசியமானது.எனவே அதைத் தொடர்ந்து விபரிப்பது அவசியமானது.இன்றைய தலைமுறைக்கு வரலாறு குறித்த புரிலென்பது அவசியமானது.இந்த இளையவர்களைக் காயடித்த காலத்தை நாம் உறுதியாகக் புட்டுவைப்போம்.தொடர்ந்து உள்ளே வாருங்கள்.




வல்வெட்டித்துறைச் சிவன் கோவில் பிரபாகரனின் பூட்டனரான திருமேனிதாஸ் என்பவரால் கட்டப்பட்டது. திருமேனியர் குடும்பம் என்றும் அழைக்கப்பட்ட இவர்களே ஏனைய வல்வெட்டித்துறைக் கோயில்களான மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில்களையும் கட்டினர். இவை இவர்களது பரம்பரைக் கோவில்களாகும். வல்வெட்டித்துறை சிவன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்தவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளையாகும். இவர்களே முதன் முதலில் இந்தியாவிலிருந்து கிருபானந்தவாரியாரை அழைத்து சொற்பொழிவு செய்வித்தனர். மீனவர்கள் அல்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்றுவரை வல்வெட்டித்துறையில் இவர்களின் கோவில்களுக்குள் நுழைய முடியாது கோவில் கிணறுகளில் தண்ணீரையும் அள்ளவும் முடியாது. கம்பர் மலையைச் சேர்ந்த புலிகள் அமைப்பில் முக்கிய நபராக இருந்த பண்டிதரோ அல்லது இன்றைய தமிழ்செல்வனோ இந்தக் கோவில்களில் இன்றும் நுழைய முடியாது. புலிகள் ஒடுக்கப்ட்ட மக்களை தம் சொந்த தலைவரின் ஊரில் கோவில்களில் இன்று வரை நுழைய விடவில்லை. வழிபாட்டில் சுதந்திரத்தை மனித சமத்துவத்தை வழங்கவில்லை. இந்த நிலையில் ஊர்ப்பெருமையில் கூட இருந்து விடுபட முடியாத பிரபாகரனை தமிழ் தேசியத்துக்குத் தலைவர் என்று கொண்டாடும் அற்பத்தனங்கள் மேடையேறுகின்றன. பிரபாகரனின் சொந்தக் கிராமம் புஸ்பராசா போன்றவர்களால் புகழப்படும் வல்வெட்டித்துறையின் கோவில்களில் பஞ்சமர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. பள்ளர் சமூகம் உள்ளே விடப்படுவது கிடையாது. பஞ்சமர்களில் கரையார சமூகம் இடம் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்கடத்தல் மூலம் வல்வெட்டித்துறையில் மீனவ சமூகத்தில் ஒரு பிரிவு பொருளாதார ரீதியாக உயாந்தபோது, அயற்கிராமங்களில் உள்ள வேளாள சமூகத்துடன் சாதி ரீதியிலான முரண்பாடுகளைக் குறைத்தது. மேலும் நிலத்தில் உழைக்க வேண்டிய தேவையில்லாத வல்வெட்டித்துறையின் மீன்பிடிச சமூகத்தை, கடல் சார்ந்து வாழ்ந்தவர்களை வல்வெட்டித்துறைக்கு வெளியே நிலங்களையும் விவசாய நிலங்களையும் கொண்டிருந்த வேளாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கள்ளக் கடத்தல் செய்வதன் மூலம் வல்வெட்டித்துறையில் உயர்பிரிவுகள் பருத்தித்துறை உட்பட பல முக்கிய இடங்களில் பெரிய வர்த்தகர்களாகவும், சமூகச் செல்வாக்குள்ள நபர்களாகவும் உருவாகியிருந்தனர். எனவே கிட்டத்தட்ட சமத்துவமான உறவு இரு பிரவுகளுக்கிடையேயும் நிலவியது. கடலில் சுதந்திரமாய் இருந்து செயற்பட்ட வல்வெட்டித்துறை உயர்மட்ட கரையாருக்கும் வேளாளருக்கும் 'முழங்கையில் பிடித்து விருந்துக்கு அழைப்பது' என்ற அளவுக்கு உறவு இருந்தது (முழங்கையில் பிடித்து விருந்துக்கு அழைத்தால் பிடிக்கும் பிடி வழுக்கி விடும்). 1980களின் பின்னர் இந்தப்போக்குகள்மாறி உயர்மட்டக்கரையார் வேளார்னளிடையே திருமணபந்தங்கள் ஏற்படத்தொடங்கின.

கள்ளக்கடத்தலும் வல்வெட்டித்துறையும்:

வல்வெட்டித்துறையில் வீரம், விடுதலையுணர்வுகளை எழுதியோய்ந்த புஸ்பராசா, அடுத்து அதன் கள்ளக்கடத்தல் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் விவாதங்களை முன்வைக்கிறார். இலங்கை, இந்திய அரசுகள் கடல் கடந்த வாணிபத்தை தடைசெய்து சட்டரீதியாக கட்டுப்படுத்திய போது தான் கள்ளக்கடத்தல் தோன்றியதாய் நியாதிக்கம் தரும் அவர் இலங்கை இந்திய தமிழர்களிடையே தொடர்புகளை இல்லாதொழிக்கவே இச்சட்டம் ஏற்படுத்தப்பட்டதாய் புதிய கட்டவிழ்ப்புக்களையும் நடத்துகின்றார். முதலாவதாக, இலங்கை இந்திய சுதந்திரத்திற்கு முன்பான சில போக்குகளை புஸ்பராசா இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்த பின்பான போக்குகட்கு எதிராக நிறுத்த முயல்கிறார். இலங்கை ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் அது தனக்குரிய எல்லைப்பாதுகாப்பு, சுங்கவரி சார்ந்த சட்ட விதிகளை கொண்டுள்ளது என்பதுடன் இலங்கையும் இந்தியாவும் சட்டபூர்வமாக கடல் வாணிபம் செய்கின்றன. இதை எப்படி சில வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல் முதலாளிகள் தகர்க்க முடியும்? கள்ளக்கடத்தலை தடுப்பது எப்படி இந்திய இலங்கை மக்களுக்கிடையேயான உறவைத் தடுப்பதாகும்? என்று புஸ்பராசா எங்கும் தனது எழுத்தில் விளங்கப்படுத்தவில்லை. வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல் சக்திகளுகட்கு இந்திய கள்ளக்கடத்தல் சக்திகளுடன் தொடர்பு இருந்ததே தவிர சாதாரண இலங்கை இந்திய தமிழர்கட்கு இத் தொழிலோடு எந்த கலாச்சார சார்ந்த இனப் பெருமை கொண்ட உறவும் இருக்கவில்லை.

கள்ளத் தோணிகள்:

வல்வெட்டித்துறைக் கள்ளக்கடத்தலை பேசுபவர்களும், அதை சரி என்று வாதிடுபவர்களும் கவனமாக மறைக்கும் விடயம், கள்ளகடத்தலுக்கு முன்னோடியாக இருந்தது கள்ளதோணிகனில் ஆட்களை இந்தியாவிலிருந்து கடத்தி வந்து விற்பதாகும். இது ஒருவகை அடிமை வியாபாரமாகும். தமிழர்களை தமிழர்களே கடத்தி வந்து விற்பதாகும். தமிழக ஏழைத்தமிழர்களை விற்பனை செய்வதை புஸ்பராசா இரு நாடுகட்குமான கலாச்சார பாலமாக இந்தியா வாழ் இலங்கை தமிழர்களுக்கிடையேயான உறவாக விளங்கப்படுத்துவர் போலும். 1950 களில் தொடங்கி 1960 வரையிலான கால கட்டத்தில் இலங்கை ஒப்பிட்டு ரீதியில் இந்தியாவை விட உயர்வான பொருளாதார நிலைமைகளைக் கொண்டிருந்தது. இந்தியா பொருளாதார நெருக்கடிக்களையும், பசி, பட்டினியையும் அனுபவித்துக் கொண்டிருந்தது. இதனால் பல பத்தாயிரம் இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த ஏழை மனிதர்கள் இலங்கையினால் ஈர்க்கப்பட்டனர். அக்கால கட்டத்தில் வல்வெட்டித்துறையில் கடத்தல் படகுகள் இரண்டு மூன்று என்று ஒன்று கூடி தமிழ்நாட்டில் இருந்து படகுக்கு 20, 25 பேர் என்ற அளவில் ஆட்களை கடத்தி வந்தன. இவர்களே கள்ளத்தோணிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆட்களை கடத்தி வரும்போது கடத்தல்காரர்கள் கடற்படையினரைக் கண்டால் அல்லது கரைகளில் இராணுவத்தையோ பொலிசையோ கண்டால் கடலில் ஆட்களை கவிழ்த்து விட்டு தப்பி ஓடி விடுவார்கள். இப்படி பிழைப்புத் தேடி இலங்கை வர முயன்ற ஆயிரக்கணக்கான இந்தியாவின் பஞ்சப்பட்ட மனிதர்கள் பாக்கு நீரிணைக் கடலடியில் உயிரோடு புதையுண்டு போயினர். இப்படி பல நுhறு மனிதர்கள் கதைகள் எழுதப்படாத இலக்கியங்களாக வாழ்கின்றன. இப்படி கடலில் இறந்த கள்ளத்தோணி மனிதர்களின் உடல்கள் கடற்கரையில் அநாதைப்பிணங்களாக ஒதுங்குவது சாதாரணமாக பத்திரிகைகளில் அனேகமாக இடம் பெறுவதில்லை.






கள்ளத்தோணிகளில் கொண்டு வரப்படுபவர்களை வாங்கிச் செல்லவதற்காக யாழ்ப்பாணம், கொழும்ப வன்னிப்பகுதிகளில் இருந்து ஆட்கள் வருவார்கள் இந்தக் கள்ளத்தோணி மனிதர்களை 100, 200, 500 என்று நிலைமைக்கு தகுந்தபடி விற்கப்படுவார்கள். இப்படி வாங்கப்படும் மனிதர்கள் கடைகள், களஞ்சியங்கள், தோட்டங்கள், வீட்டுவெலை, உணவுவிடுதிகள் என்று வேலைகளில் ஈடுபடுத்தப்படவார்கள் வாங்கியவரின் கடன்காசு தீரும் வரை பல வாங்கிய முதலாளியின் விருப்புக்குகேற்ப இந்த மனிதர்கள் வருடக்கணக்கிலும் பல சமயங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதன் பின்பே இந்த மனிதர்கள் சுதந்திரமாக உழைத்துப் பிழைத்து இந்தியாவில் உள்ள தமது குடும்பங்களுக்கோ பிள்ளை குட்டிகளுக்கோ பணம் சேர்க்க முடியும். அதுவும் பொலிஸ், காட்டிக் கொடுப்போரென்ற கெடுபிடிகளுக்கும் அஞ்சியே இவர்கள் வாழந்து உழைத்தனர். இப்படிக் கள்ளத்தோணியில் கொண்டு வரப்படுபவர்கள் வருடக்கணக்கில் சாப்பாடு மட்டும் கொடுத்து உழைப்பித்த சம்பவங்களும் அடித்து, உதைத்து, அடிமை போல் வேலை வாங்கிய கதைகளும் வருடக் கணக்கில் உழைத்துவிட்டு காசு கேட்ட போது பொலிசில் காட்டிக் கொடுப்பது, கொலை செய்வது, அடி போட்டுக் கலைப்பது என்பன கூட சாதாரணமாக இருந்தது. இக்காலத்தில் வன்னிப் பகுதிகளில் காடு வெட்டுவதிலும் அருவி வெட்டுதல், கிணறு வெட்டுதல், மாடு வளர்ப்பு, தோட்டவேலைகளைச்செய்ய கள்ளத் தோணியில் கொண்டு வரப்பபட்ட இந்த மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர். நெடுங்கேணியில் தேத்தண்ணிக்கடையில் வேலைசெய்த 'வடக்கத்தையான்' போட்ட தேத்தண்ணியில் இலையான் இருந்தது என்பதற்காக அவன் அடித்துக்கொல்லப்பட்டு காட்டுக்குள் வீசப்பட்டான். கழு அல்பேட் மற்றும் ஒரு யானைததீப்பெட்டி புகழ் ஜி.ஜி.பொன்னம்பலம் கொலையாளிக்காக நீதிமன்றத்தில் வாதாடி கொலையாளியை விடுதலை செய்த கதை பிரபல்யமானது. இக்காலத்தில் இந்த அநாதரவான மனிதர்கள் மடடுமல்ல, சாதாரணமாக வாழ்ந்த ஏனைய இந்திய வம்சாவளிமக்களும் தோட்டத் தொழிலாளர்களும் கள்ளத்தோணிகள் என்று நையாண்டியாக அழைக்ப்பட்டனர். பிடிபடும் கள்ளத் தோணிகள் பொலிசாரால் துன்புறுத்தப்பட்டதுடன் அவர்கட்கு வாதாட சட்டத்தரணிகளும் கிட்டவில்லை. தமிழர்கட்காகவே அவதாரம் எடுத்ததாகச் சொன்ன தமிழரசுக் கட்சியினர் இந்தக் கள்ளத்தோணிகட்காக வாதாடியது கிடையாது. மாறாக கடத்தல்காரர்களை மீட்க தமிழரசுக் கட்சியில் சட்டதரணிகள் தாரளமாக இருந்தனர். கள்ளத்தோணிகளை அடைத்து வைக்க கொழும்பு கொம்பனித்தெருவில் தனிமுகாம் இருந்தது. இங்கு வருடக்கணக்கில் இந்த மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.

வல்வெடடித்துறையில் தொடங்கிய கள்ளத்தோணியில் ஆட்களைக் கடத்துவது ஏனைய கரையோரக் கிராமங்களான பருத்தித்துறை, மயிலிட்டி, மாதகல்வரை பரவியது. இந்த இடங்களிலும் வல்வெட்டித்துறை ஆட்களே தமது ஆட்களை வைத்து இந்தியாவிலிருந்து ஆட்களை கடத்தி வந்தனர். இத்தொழில் கள்ளத்தோணிகளைக் கடத்தி வருவது, விற்பனை, தரகர்கள், வியாபாரிகள் கார்ச்சாரதிகள் என்ற பெரும் வலைப்பின்னலைக் கொண்டிருந்தது. கள்ளத் தோணியில் கொண்டு வருபவர்களை இராணுவம், பொலிசாரிடம் அகப்படாமல் பாதுகாப்பான இடங்கட்கு கொண்டு செல்ல இரவிரவாக ஏ போட்டி சோமுசெட் கார்கள் ஓடும். இக்காலத்திலேயே அதிக பொலிஸ் இராணுவ முகாம்கள் கடற்படை என்பன வல்வெட்டித்துறைப் பகுதியில் அரச கண்காணிபபுக்கள் பெருகத் தொடங்கின. குடா நாட்டின் கடற்கரையோரக் கிராமங்களில் அரசபடைகள் நுழைவது தொடங்கியது. இலங்கையில் கள்ளத் தோணி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ், தமிழினப் பெருமை பேசுவோர் அன்று சொந்த தமிழர்களை கடத்தி வந்து இலங்கையில் விற்றுத்தான் பெரும் செல்வம் திரட்டினர். அதையே தொழிலாகச் செய்தனர். சில சமயங்களில் இந்தக் கள்ளத்தோணித் தமிழர்கள் தென்னிலங்கைக்கு சிங்களவர்கட்கும் விற்று பணமாக்கப்பட்டனர். இவ்வாறாக தென்னிலங்கைக்கு கள்ளத்தோணித் தமிழர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே முதன்முதலில் ஆனையிறவு இராணுவமுகாம் நிறுவப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இம்மனிதர்கள் புதிய நிலைமைகளில் ஆதரவற்றவர்களாக சுயமாக இயங்க முடியாதவர்களாக கட்டளைகளை மீற முடியாதவர்களாக மனித இழிவுகளை சகிக்க கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக பிறவிகளாக இருந்தனர். எந்தத் தமிழ் பெருமை பேசம் பொய்யர்களும் இந்தக் கள்ளத் தோணி தமிழர்களுகட்கு இரங்கவில்லை. மனிதப்பிறப்பாக பொருட்படுத்தப்படவில்லை தமிழ் கட்சிகள் இந்த மனிதர்களை பொருட்படுத்தவில்லை. கள்ளத் தோணிகள் வராமல் தடுப்பது பற்றி பேசிக் கொண்டே மனிதர்களை கடத்துபவர்கள், கடத்தி பணம் சேர்த்தவர்கட்காக அவர்கள் வாதிட்டனர்.

இத்தகைய மனிதக் கடத்தல் கள்ளத் தோணி உழைப்பில் தான் வல்வெட்டித்துறை கடத்தல் துறையில் நுழைந்தது, பிரபல்யமானது, செல்வம் தேடிக் கொண்டது. கடத்தலின் ஆரம்பம் இந்தியாவிலிருந்து தமிழர்களை தமிழர்களே கடத்தும் விற்பனை செய்யும் வியாபாரம் தான். இது சராசரி 1968, 1970 களில் உலகப் பொருளாதார நெருக்கடிகள்> டொலர் நாணய வீழ்ச்சி என்பன இலங்கையின் விலைவாசி உயர்வு பொருளாதாரவீழ்ச்சி என்பவற்றை ஊக்கப்படுத்தியது. வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகியது. இந்த நிலைமையில் இலங்கைக்கான கள்ளத்தோணி வரவு வீழ்ச்சி காணத் தொடங்கியது. மனிதர்களை கடத்துவது பொருளாதார ரீதியாக பயன்பாட்டுடைய தொழிலாக இருக்கவில்லை. அதே சமயம் வல்வெட்டித்துறை தனது மரபான மீன்பிடித் தொழிலுக்கு திரும்ப செல்லவில்லை. மீன்பிடி பிராதன தொழில் என்ற கவர்ச்சியை முன்னிலையை அடையவில்லை. போதியளவு வருவாய் ஈட்டும் தொழிலாகவும் இருக்கவில்லை. எனவே வழக்கமான கடத்தல் கள்ளத் தோணி உழைப்பில் ஈடுபட்ட்வர்கள் வசதி படைத்தவர்கள் பொருட்கடத்தலில் ஈடுபடத் தொடங்கினர். வல்வெட்டித்துறை, திக்கம், சக்கோன், பருத்தித்துறை போன்ற இடங்களில் புதிய கடத்தல் மையங்கள் தீவிரமாய் உருவாகின. இதன் எதிரொலியாக அரசாங்கம் புதிய பொலிஸ் இராணுவ நிலையங்களை அமைத்தது. கடற்படைமுகாம்கள் திறக்கப்பட்டது. கள்ளக்கடத்தலைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கள்ளக்கடத்தல்காரர்கள் இலங்கையிலிருந்து சாதிக்காய், கராம்பு, பாக்கு, பாதரசம், மருந்துகள், லக்ஸ்சோப், நைலோன் துணிகள், ரான்சிஸ்டர் ரேடியோ கொண்டு சென்றனர். இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் சேலை, சாரம் திருமணப்பட்டுப்புடவைகள், அபின், தங்கம், பருப்பு, மஞ்சள் என்பன கடத்தப்பட்டன. கடத்தப்படும் பொருட்கள் குடா நாட்டிற்குள் மட்டுமல்ல வன்னி முதல் கொழும்பு வரை கொண்டு செல்லப்பட்டது. 1970 ஆண்டுகளில் இலங்கையில் இடதுசாரிக் கூட்டரசாங்கம் ஏற்பட்டு உள்ளுர் விவசாய முயற்சிகளும் உற்பத்தியும் ஊக்கம் பெற்றது. சுயசார்ப்பு பொருளாதாரம் வளர்ந்தது. 1972 இல் இலங்கை அரசு அந்நியப்பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது. இதன் மூலம் உள்ளுர் தொழில்கள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி யடைந்தன. விவசாய முயற்சிகள், இளைஞர் குடியேற்றத்திட்டங்கள் பெருகின. இந்தியாவிலிருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உழுந்து, பயறு, பருப்புவகைகள் என்பன வன்னி மற்றும் கிழக்கு பகுதிகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டது. கோவா, லீக்ஸ், கரட் உட்பட வெளிநாட்டு காய்கறி வகைகளும் உற்பத்தியாகி பெருமளவில் சந்தைக்கு வரத் தொடங்கியது. செத்தல் மிளகாய் உற்பத்தி புதிய வேகம் பெற்றது. செத்தல் மிளகாய் பயிர் செய்த பல விவசாயிகள் நிறைய இலாபம் பெறும்காலம் தொடங்கியது. இலங்கையில் கூட்டுறவுத்துறை வேகமாக வளர்ந்தது. யாழப்;பாண மாவட்டத்திலும் கூட்டுறவுச்சங்கங்கள் சிறப்பாய் வளர்ச்சி பெற்றன. சங்கானை பண்டத்தரிப்பு போன்ற ப.நோ.கூ சங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு வளாந்ததுடன் வெளிநாட்டுத் துணிகளின் தரத்தை எட்டத்தக்க செயற்கை நூலிழையிலான துணிகளையும் தராளமாய் உற்பத்தி செய்தன. பண்டதரிப்பு ப.நோ.கூ சங்கம் 'பண்ட்கோப்' என்ற பெயரில் பலவித பொருட்களை உற்பத்தி செய்து விற்றது. கூட்டுறவுத்துறையில் உற்பத்திப் பொருட்கள் வெளிநாட்டு ஏற்றுமதி மட்டத்திற்கு சென்றன. பெருந்தொகையானவர்கள் இங்கு வேலை செய்தனர் வரலாற்றில் முதன் முறையாக யாழ்குடா பெருமளவு உற்பத்தியை செய்தது. விவசாயிகட்கு உற்பத்திப் பொருட்களுக்குரிய விலை கிடைத்தது. பலர் விவசாய முயற்சிகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டனர். படித்த வாலிபருக்கான முத்தையன்கட்டு போன்ற குடியேற்றத்திட்டங்கள் பெரும் தொகையான குடாநாட்டு இளைஞர்கள் ஊக்கத்துடன் குடியேறத் தொடங்கினர். நம்பிக்கையோடு விவசாய முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தக் கட்டத்தில் தான் வல்வெட்டித்துறையில் மற்றும் வடக்கின் கடற்கரை சார்ந்த பிரதேசங்களில் கள்ளக்கடத்தல் விரைவாகப் பெருகி வளர்ந்தது. இவை இந்தியாவிலிருந்து பொருட்கள் கடத்தி வந்ததின் மூலம் இலங்கையில் முக்கியமாக தமிழ்மக்களது உள்ளுர் உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஆடை உற்பத்தியின் முன்பு உள்ளுர் உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. முக்கியமாக இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஆடை உற்பத்தியுடன் துறையுடன் இலங்கையினதும் தமிழ் பகுதிகளதும் உற்பத்திக்கு போட்டிநிலைக்கு தள்ளப்பட்டது. கடத்திக் கொண்டு வரப்பட்ட இந்தியாசசாரங்களுடன் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சாரங்களால் போட்டி நிலையில் நின்று பிடிக்க முடியவில்லை. உண்மையில் கள்ளக்கடத்தலானது நேரடியாக தமிழ் மக்களின் சுய பொருளாதார வளர்ச்சியை சேதப்படுத்தியது. இடதுசாரிக் கூட்டரசாங்கம் கள்ளக்கடத்தலை ஒழிக்க முயன்றது அதை தடுக்குமுகமாக இராணுவம் மற்றும் கடற்படைகளின் தொகைகளை அதிகரித்தது. கடற்கரைகளில் நீண்ட தூரம் கண்காணிக்க் கூடிய 'சேர்ச்லைற்' கள் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறாக வல்வெட்டித்துறையின் சட்ட விரோதப் பொருளாதாரத்தை கறுப்புச்சந்தை வட்டத்தை உடைக்க அரசு முயன்றது.

எனவேதான் கள்ளத்தோணியில் ஆட்களைக் கடத்துதல்> கள்ளக்கடத்தல் போன்றவற்றிற்கு எதிரான இலங்கை பொலிஸ், இராணுவம், கடற்படை என்பவற்றிற்கு எதிர்ப்புக்கு காட்டுவதிலே தான் மோதலில் ஈடுபடுவதில் தான் அரசு எதிர்ப்பு தொடங்குகிறது. வல்வெட்டித்துறை எனும் முழுக்கிராமுமே கள்ளக் கடத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடையதாக இருந்தது. இலாபம் மீட்டும் கிராமாக இருந்தது. இவர்கள் அரசபடைகளை சிங்களவர்கள் என்றே அழைத்தனர். இதனூடு சிங்களவர்கள் வல்வெட்டித்துறை மக்களை வாழவிடாமல் தடுப்பததான கருத்தியல் உருவாக்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல வசாவிளான், மாதகல், காங்கேசன்துறை, மயிலிட்டி, பருத்தித்துறை போன்ற கடத்தலோடு தொடர்புடைய இடங்களிலும் அரசபடைகட்கு எதிர்ப்பு இருந்தது. அரசபடைகளை எதிர்ப்பது என்பது இவர்களது பொதுப்பண்பாக இருந்தது. இது தமிழர், சிங்களவர் முரண்பாடாக பல இடங்களில் விளக்கமளிக்கப்பட்டது. வல்வெட்டித்துறை போன்று உரும்பிராயிலும் அரச எதிர்ப்பு இருந்தது. உரும்பிராயில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வழக்கமாக இருந்தது. வடபகுதியில் உரும்பிராய் கள்ளச்சாரயத்துக்குப் புகழ் பெற்றது. மக்களின் வாழ்வு இத் தொழிலுடன் பின்னப்பட்டு இருந்தது. விவசாயத்தைவிட இது அதிக வருவாயையும் சிரமம் குறைவான தொழிலாகவும் இருந்தமையால் பலர் இத்தொழிலுக்குப் போனார்கள். நல்ல சந்தையும் இருந்தமையால் இத் தொழில் பெருகியது. உரும்பிராய் சட்டவிரோத சாராய உற்பத்தியின் மையமாய் மாறியமையால் பொலிஸ் சோதனை, அடியுதை, லஞ்சம், கைது, சிறை என்பன அங்கு சாதாரணமாக இருந்தது. பொலிஸ் தொந்தரவு என்பது அங்கு ஒரு நிரந்தரமான ஒன்றாக இருந்தது. இதே நிலைமையே வல்வெட்டித்துறைப் பகுதியில் இன்னும் மூர்க்கமான நிலைமையில் இருந்தது. சட்டவிரோத பொருளாதாரம் சட்டவிரோத வாழ்வு என்பன அரசை எதிர்ப்பதைக் கட்டாய நிபந்தனையாக்கியது. அரசபடைகளை எதிர்க்கும் பண்பாக மாற்றமடைந்தது. இதை தமிழின உணர்வாக கற்பிப்பது அரசியல் சந்தர்ப்பவாதமாகும்.

இதையே புஸ்பராசா வல்வெட்டித்துறையை வீரத்தமிழன் விளைநிலம் என்று பாடம் புகட்டுகின்றார் கடத்தல் தொழிலானது கூட்டமாய் சேர்ந்து வாழும் பண்பை கூடி நிற்பதை கட்டாயமாக்கியது. அடிபிடியும் துணிச்சலும் சாகத்தன்மையும் கொண்ட வாழும் நிலைமைய படைத்தது. பொலிசை, இராணுவத்தை எதிர்த்து போரிட்ட, தப்பிவந்த, ஏமாற்றிய கதைகள் வீரக் கதையாகியது. வல்வெட்டித்துறையில் உள்ள செல்வந்தர்கள், முதலாளிகள் தமது வள்ளங்களை கடத்தலில் ஈடுபடுத்தினர். சொந்தமாயும் கூலிக்கும் ஆட்கள் வைத்து தொழில் செய்தனர். இவர்கள் மயிலிட்டி தக்கம், சக்கோட்டை, காரைநகார், பருத்தித்துறை, நெடுந்தீவு வரை ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் இலங்கைக் கடற்கரைகளில் மட்டுமல்ல இந்திய தமிழ் நாட்டு கடற்கரைகளிலும் சுங்கப்பகுதி பொலிஸ் போன்றவை சார்ந்த ஆபத்துக்களை எதிர்நோக்கினர். இவர்களது கடத்தல் பொருட்கள் கொள்ளையிடப்படுவதும் அங்கு நடைபெற்றது. அபின், தங்கம், வெடி மருந்து பொருட்கள் போன்றவை சார்ந்த கடத்தல் சிரமமான ஆபத்தான நடவடிக்கையாக இருந்தது. இலங்கையில் இவர்கட்கு கார் சராதிகள், ஏஜண்டுகள், புறொக்கர்கள், தகவல் தருவோர், பொருள் தூக்குவோர், ஓட்டிகள் என்று பலர் இருந்தது போல தமிழ் நாட்டிலும் கடத்தல் சார்ந்த ஒரு வலைப்பின்னல் இயங்கியது. கடத்தல் ஈடுபட்டவர்கட்கு தமிழ் நாட்டில் பெண்கள், மனைவி, குழந்தைகள் கூட இருந்தனர். இலங்கை தமிழ் நாடு என்று இரண்டு பக்கமும் மனைவி, குழந்தைகளைக் கொண்டிருந்தவர்களும் இருந்தனர். உதாரணமாக TELO தங்கத்துரையின் மனைவி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்; ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் வல்வெட்டித்துறை நபருக்கும் மகளாகப் பிறந்தவர். தங்கத்துரையின் தமக்கை வல்வெட்டித்துறையுடன் தொடர்புடைய ஒருவரையே தமிழ் நாட்டில் திருமணம் செய்திருந்தார்.

கள்ளகடத்தல்காரர்களிடையே போட்டியும் ஒருவரையொருவர் கடலில் கொள்ளையிடுவதும் சாதாரணமாக இருந்தது. வள்ளத்தின் ஓட்டியைக் கொன்று அல்லது ஓட்டிக்குப் பணம் கொடுத்து பொருட்களை அபகரிப்பது, சூறையாடுவது கள்ளக்கடத்தலுடன் ஒட்டிப் பிறந்த அம்சமாக இருந்தது. வல்வெட்டித்துறையில் மற்றவர்களின் கடத்தல் பொருட்களை கொள்ளையிடுவதை 'கோட்டா அடித்தல்' என்று கூறுவார்கள். கடத்தல் பொருட்களை படகுகளிலிருந்து இறக்கும் வேலைக்கு பள்ளிமாணவர்கள் கூடச் சென்று பணம் உழைப்பார்கள். இதை 'தூக்குக்குபோதல்' என்று சொல்லப்படும். கள்ளக்கடத்தல் மோசமான தொழிலாக இலங்கை மக்களது சுயபொருளாதார வாழ்வு முயற்சிக்கு எதிரானதாக கருதப்படவில்லை. வல்வெட்டித்துறையில் கள்ளக்கடத்தல் சிறப்பான தொழிலாக கருதப்பட்டது. இது ஒரு போதும் தவறான தொழிலாக எண்ணபட்டதில்லை. கடத்தல் சார்ந்த சட்டவிரோத வாழ்வை நியாப்படுத்தும் போக்குகள் உருவாகின. அதுவே வாழும் தர்மமும் ஆகியது. வன்முறைகள் பிரதான அம்சமாக இருந்தது. கத்தி, வாள், திருக்கைவாள், துவக்கு, குண்டு என்பவற்றுடன் ஒரு சட்டவிரோதப் பொருளாதாரம் வல்வெட்டித்துறை மக்கள் மயமாகியது. சட்டவிரோதமாய் குவிந்த பணம் - பெரும் செல்வம் - அயற்கிராமங்கள் மேல் செல்வாக்கு செலுத்தும் போக்காய் மாறியது.

கள்ளக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீன்பிடித்தொழிலை மிகவும் இழிவான தொழிலாகக் கருதினர். இவர்கள் மீன்பிடித்தொழிலி ஈடுபட்டிருந்தவர்களை மதிக்கவில்லை; பொருளாதார ரீதியாக இவர்கள் உயர்நிலையில் இருந்தனர்; கெளரவமாய் மதிக்கப்பட்டனர்; கடத்தல்காரர்களுக்கு பெண் கொடுக்க எடுக்க போட்டி இருந்தது; சாதாரண மீன்பிடித்தொழிலாளர்களுடன் கள்ளக்கடத்தல்காரர்கள் பழக மாட்டார்கள், கொடுக்கல் வாங்கல் செய்யமாட்டார்கள், அவர்களை சபை சந்திக்கு அழைக்க மாட்டார்கள். இவர்களின் பிள்ளைகள் உயர்கல்வி, அரசசேவைகள் ஆகியவற்றில் ஈடுபட்ட போதும் கள்ளக்கடத்தலுடனான தொடர்பும் மறுபுறம் நிலவியது. வல்வெட்டித்துறையில் இதனால் செல்வம் திரட்டியவர்கள் வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல பருத்தித்துறை உட்பட பல இடங்களில் காணிகள், வீடுகள், வியாபார தாபனங்களை கொண்டிருந்தனர். பெருந்தொகை பணம், போட்டி, அரசியல் செல்வாக்கு இவைகளினூடாக சாராயத்தவறணைக் குத்தகைகள் இவர்களால் எடுக்கப்பட்டது. அந்தக் காலத்தில் பெரும் காசுக்காரர்களே சாராயத்தவறணையைக் குத்தகைக்கு எடுக்கப் போட்டியிட்டனர். யாழ்ப்பாணத்தில் புடவைக்கடை முதல் நகைக்கடைகள் வரை இவர்கள் கொண்டிருந்தனர்.யாழ்ப்பாணத்தில் பரிய நகைக்கடையான வைரமாளிகை வல்வெட்டித்துறையைச் செர்ந்தவர்களுக்கு உரியதாகும். நீச்சல் வீரரான 'ஆழிக்குமரன் ஆனந்தனின்' தந்தையார் விவேகானந்தன் கள்ளக்கடத்தலோடு தொடர்புடையவரே. வல்வெட்டித்துறையின் கள்ளக்கடத்தல் முதலாளியான சுப்பரமணியம் என்பவர் 1960 களின் நடுப்பகுதியில் ' சுபசரணசப்தகித்த' என்ற சிங்கள சினிமா படத்தை தயாரித்தவர். வல்வெட்டித்துறை ' ரஞ்சனா' தியேட்டர் 'பக்கர்' என்ற பட்டப்பெயரை கொண்ட கள்ளக்கடத்தல் பணக்காரரால் தான் கட்டப்பட்டது.

வல்வெட்டித்துறையில் பொலிஸ், இராணுவம், கடற்படை மட்டும் வெறுக்கப்படவில்லை அயற்கிராமத்தவர்கள், அந்நியர்கள், கிராமத்திற்குப் புதிதாக வருபவர்கள் வல்வெட்டித்துறையில் இலேசாக நுழைந்துவிட முடியாது. வல்வெட்டித்துறைக்கு புதியவர்கள் கிட்டத்தட்ட முழுக்கிராமத்தாலும் கண்காணிக்கப்பட்டனர். கள்ளக்கடத்தலின் பின்பே வல்வெட்டித்துறை பயமூட்டும் கிராமமாக மாறியது. சூழவுள்ள கிராம மக்கள் கூட வல்வெட்டித்துறைக்கு போய் வர பயந்தனர். சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் அடியுதை போட்டுக் கலைக்கப்பட்டு விடுவார்கள். வல்வெட்டித்துறையில் புதியவர் ஒருவர் தென்பட்டால் ஏன் வந்தாய்? எதுக்கு வந்தாய்? ஆரிட்டைப் போய்விட்டு வாறாய்? என விசாரணைகள் நடப்பது சாதாரண விடயம் அயற்கிராமங்கள் வல்வெட்டித்துறையாருடன் பகைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். விளையாட்டுப் போட்டிகள், பந்து விளையாட்டு என்று வல்வெட்டித்துறைக்குப் போய் சாத்து வாங்கிக் கொண்டு வருவது மிகவும் சாதாரண விடயமாகும்.

தொடரும்...

தமிழரசன்
பேர்ளின்.


Keine Kommentare: