Donnerstag, August 09, 2012

சபா நாவலனின் நூலுக்கான விமர்சனம்:4

இன்று பலதரப்பட்ட முகங்களுடாகக் கூடும் அரசியல் நிகழ்ச்சிக்குட்பட்ட கூட்டுக்கள் மிக நேர்த்தியாகப் புலிப் பாசிசத்தாலும்,இலங்கையரசினது இனவொடுக்குமுறையாலும் பாதிப்படைந்த இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து பிளப்பதிலும் "ஒருங்கிணைந்து" இயங்குதலைத் தடுப்பதிலும் வெற்றி கொண்டுள்ளன.

இந்தக் கூட்டுக்களால் கிழக்கு மாகாண மக்களைப் பிளந்து,ஆதிக்கச் சக்திகளுக்குத் தமிழ்பேசும் மொத்த மக்களையும் அடிமையாகுவதும் சாத்தியப்பட்டிருக்கிறது. பலவீனப்படுத்தபட்ட தமிழ் பேசும் மக்களது ஒருகிணைந்த எதிர்ப்பரசியலை மீளக் கூட்டணியின் விருத்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒன்றிப்போக வைத்ததில் இலங்கைக்கு "ஜனநாயக-போராட்ட" வழியிலும்,காந்திய அகிம்சையிலும் முன்னுதாரணமிக்கதாக மாறிக்கொண்டிருக்கும் புலிப் பிரமுகர் கே.பி. இவர்களைத் தொடர்ந்து பல்வேறு வகையிற் கவனித்து இயக்கிக்கொண்டிருக்கிறார்.இதுவொரு எதிர்ப்பரசியல் பரிணாமம்தாம்.

மக்களைத் தொடர்ந்து பிளவுப்படுத்துவதை அதிகாரம்-ஆதிக்கமானது தனது வர்க்க அரசியலது தெரிவில் ஒரு ஆயுதமாக வர்க்க வொடுக்குமுறையில் பயன்படுத்துகிறது.பல்வேறு வகையிலான குழுக்களை இந்திய-இலங்கை மேற்குலக சார் "அரசுசார அமைப்புகள்" தமது நிதியீடுகளுடாக மிகவும் ஒழுங்கமைந்த முறையில் வழி நடாத்துகின்றன-"நிலத்து-புலத்து" அரசியலரங்குக்கு மிக நேர்த்தியாக முன் தள்ளியும் விடுகின்றன.

இத்தகைய குழுக்கள் பலதரப்பட்ட கருத்தியற் போராட்டத்தை நிகழ்த்துவதைக் குறித்துத் தமிழரசன் , நாவலன் நூலுக்கான விமர்சனத்தில் வெகு நேர்த்தியாகக் கணிப்பிடுகிறார்.




சமகால நமது அரசியல் நகர்வில் கிழக்கைப் பிளந்தவர்களும்,வடக்கைக் குழறுபடியாக்கிக் குருதியாற்றில் அரசியலைச் செய்கின்றவர்களும்,இணைகின்ற புள்ளிகள் பலதரப்பட்ட கோசங்களது முன் நகர்வில் சந்திக்கின்றது.இது, அதிகாரங்களைப் பங்கீடுசெய்வது குறித்தும்,மக்களது நலம்சார்ந்த வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்தும் அதிகார வர்க்கத்தினது ஆதிக்கத்தை நிலை நாட்டும் முகமாகச் செயற்கையாகவே கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.இந்தப் போக்கின் பிதாக்கள், இலங்கையிலிருந்து (நிலத்தில்) போரில் பாதிக்கப்பட்ட மக்களது மீட்பர்களாகவும்,புலம்பெயர் தளத்தில் பன்முகவுரையாடலது தெரிவில் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான தெளிவான அரசியலைக் குறித்துத் தொடர்ந்து போராட்ட வரலாறு-இலக்கியம்,வெளியீடுகளெனவும்,அரசியலுரையாடாலெனும் போர்வையில் பலதரப்பட்ட சக்திகளையும்-போக்குகளையும் இணைத்து இந்திய-மேற்குலக நலன்களைக் குறித்து இலங்கை அதிகார வர்க்கத்தோடு பேரங்களை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.

இதுள் முன்னாள் ஆயுதக் குழுக்களும்,பினாமிப் புலிப் பணக்காரர்களும் மிக வேகமாக இணைந்து வருகின்றனர்.இவர்களை இலக்கிய வியாபாரத்துக்கூடாக மக்கள்முன் தள்ளுவதில் மக்கள் விரோதக் கருத்தியற் போராட்டம்(சாம்பற் தத்துவம் பேசியக்கொண்ட முன்னாள் புலித் தத்துவ வாதிகளும் அவர்களைப் பின் புலத்தில் இயக்கும் வலுக்கரங்களும் இந்தப் போராட்டத்தின் உந்து சக்திகள்) செம்மையாக நடாத்தப்பட்டு வருகிறது. பணம்,இயக்க-ஆயுத மாயைகள் இவர்களது இணைவுக்கான மனவூகத்தைத் தொடர்ந்தளிப்பதால் எந்த ஆதிக்கச் சக்திகளோடும் இணைவதற்கானவொரு மக்கள் விரோத அறத்தை அவர்களுக்குத் தெரிவாக்குஞ் சந்தர்ப்பத்தை இந்திய-இலங்கை,மேற்குலக அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

இஃது, தெளிவாகவும்,வரலாறாகவும் நம்முன்னிருப்பதைத் தமிழரசன் தொடர்ந்து தோலுரித்துக் காட்டுமிடங்கள் ஒரு நூலுக்கான விமர்சனத்தில் மக்களது எதிர்ப்பரசியலின் வரலாற்று இயக்கப்பாட்டினது நிலை அலசப்படுகிற வெளியாக நம்முன் விரிகிறது.அவசியமான கருத்தியற் போராட்டத்தை இந்தப் பிழைப்பு வாதிகளுக்கெதிராக முன் வைத்திருப்பதால் அதை இனங்காண வேண்டுமெனக் குறிப்புணர்த்துகிறேன்.

மாறிவரும் ஆசியப் பொருளாதாரப் போக்குகள் குறித்துத் தமிழரசன் தரும் "புள்ளிகள்-தரவுகள்" உண்மையானதுதானவென்பதில் சந்தேகமுடையவர்கள் பேராசியர் திரு.கிஷோர் மபுபானியை [Prof.Dr.Kishore Mahbubani ] வாசிக்க வேண்டுகிறேன்.குறிப்பாக அரவரது இந்த நூற்களை 1: Can Asians Think? [Understanding the Divide Between East and West., Steerforth, 2001, ISBN 978-1-58642-033-8 ];  2 : The New Asian Hemisphere  [The Irresistible Shift of Global Power to the East, PublicAffairs, 2008, ISBN 978-1-58648-466-8 ]வாசிக்கும்படி கேடுக்கொண்டு,அடுத்த பகுதியில் சந்திக்கின்றேன்.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.08.2012


சபா நாவலனின் :தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!
-நூலுக்கான விமர்சனம்:4


ஆரிய திராவிட மோதல்கள் :
 
திராவிட மொழிகள் பற்றி ரெபெர்ட் கால்டுவெல் 1856-1875 காலத்தில் ஆய்வுகளை நடத்தித் திராவிட மொழிகள் பற்றிய நூல் வெளியிட்டார் என்பதுடன் ,குண்டர்ட் ஆகியோரும் திராவிடர் கருத்தியலை வளர்த்தனர்.மக்ஸ்முல்லர் ஆரிய மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிட்ட (1853) காலப்பகுதியிலேயே இவையும் இடம் பெற்றமையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

ஆரிய, திராவிட மொழியாய்வுகளாகத் தொடங்கிய இவைகள் விரைவில் ஆரிய, திராவிட மக்களினம்கள் என்ற கருத்துக்களாக வளர்க்கப்பட்டதை அன்றைய கொலனிக்கால மேற்குலக அரசியலின் தயாரிப்பாகவே விளங்கவேண்டும்.

இந்திய சிப்பாய் கலகம் பிரிட்டிஸ் அரசைப் பயமுறுத்தியிருந்தது ஒன்றிணைந்த இந்திய தேசிய எழுச்சிக்கான தொடக்கமாக அது இருந்தது.எனவே மக்களிடையே பிளவுகள், துண்டாடல்கள் தனியடையாளத் தேடல்கள் ஊக்குவிக்கப்பட்டன.

இப்போக்குகள் தொடர்ந்து வளர்ந்து" ஆரியர்- திராவிடர் " உயர்வுச் சண்டைகளும் , "யார் இந்திய மூத்தகுடி, வந்தேறுகுடி" என்ற வாதிடல்களும் தோன்றின.கண்முன்னேயுள்ள அந்நிய பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்களை விட்டு விட்டு ‘கைபர்கணவாய்’ ஊடாக மந்தைகளை ஓட்டிக் கொண்டு வந்தவன் ஆரியன் ,திராவிடன்தான் மூத்தகுடி என்ற வாதம்கள் தோன்றின. புராண இதிகாசம்களில் ஆரியர்- திராவிடர் தேடப்பட்டனர். ராமர் ஆரியன்,இராவணன் திராவிடன்,வசிட்டர் பிராமணன், விஸ்வாமித்திரன் சூத்திரன், சமஸ்கிருதம் தேவபாசை ,அதல்லாதவை நீசபாசை என்ற சச்சரவுகள் முன்வந்தன.
 
 
ஆரியர்- திராவிடர் சச்சரவுகள் சாதாரண இந்திய மக்களை நெருங்கவில்லை.

 மாறாக,ஐரோப்பிய சார்பான ஆங்கிலக் கல்வி பெற்றவர்களும் , நகர்ப்புறம்சார்ந்த நடுத்தரவர்க்கமுமே இக்கருத்தியல்களின் பின்பு அலைந்தனர். பிரச்சாரப்படுத்தினர். தாம் சொந்தமாக மேற்குலக மொழி , நாகரீகம், கருத்துக்களில் பறிபோயிருப்பதை இவர்கள் உணராமல் ஆரிய திராவிடக் கற்பனை எதிரிகளையும் ,தீரர்களையும் தேடி பழைய வரலாற்றின் இருட்டுள் நுழைந்தனர்.

புராண,இதிகாசக் கருத்துக்களை சரித்திர உண்மைகட்குச் சமமாய் நிறுத்தனர்.

திராவிடநாடு, ஆரிய தேசம்,இந்துஸ்தான் கேட்கும் இயக்கங்;கள் தொடங்கின. இவை இந்திய சுதந்திரத்தின் பின்பு ஏகாதிபத்தியங்களின் சொற்கேட்கும் பரிவினைச் சக்திகளாகின. இவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தின் பிம்பங்களாகவுமிருந்தனர். திராவிடப் பெருமை பேசியவர்கள் ஆரியர்களை தமது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அதாவது வட இந்திய ஆரியரையே அவ்வாறு கருதினார். ஆனால் ,மேற்குலக வெள்ளை ஆரியரை தம்மை வென்று அடிமை கொண்டவர்களை எதிர்க்கவில்லை.அல்லது , குறைந்தது வட இந்திய ஆரியராகக் கருதப்பட்டவர்களை எதிர்த்தது போல் இது நடைபெறவில்லை. ஏன் இவர்கள் இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்த்துவிட்டு ,ஐரோப்பிய வெள்ளைத் தோல் ஆரியரை விட்டு வைத்தனர்?
 
 
மேற்கத்தைய வெள்ளை ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றினர். அவர்களின்மொழி. பகுத்தறிவு, விஞ்ஞானம், அறிவியல், அரசியல், தத்துவம் இவைகளை ஏற்று ஒழுகினர். இது எப்படி நடைபெற்றது. மேற்குலக, வெள்ளை ஆரியரின் மருத்துவம் இல்லாமல் இந்தியாவின் கொலரா, அம்மை, தொழுநோய்,இளம்பிள்ளைவாதம், கசம்,மலேரியாவில் இருந்து இந்திய ஆரியர் மட்டுமல்ல திராவிடரும் தப்பிப்பிழைத்து இருக்க முடியுமா?

மேற்கத்தைய ஆரியராக கருதப்பட்டவர்களின் ஜனநாயகம், அரசமைப்பு முறைகளை திராவிடர் தழுவவில்லையா?இங்கு, கற்பனையான திராவிடர் ஆரியர்களை நிறுவும் சண்டைகள் மனித விரோதமானவையே. திராவிடர்,ஆரியர் என்ற இரு பிரிவினரிடமும் ஒருவரிடம் இல்லாத சிறப்பு உயர்வுகள் மற்றவர்களிடம் இருப்பதான கருத்துக் கட்டல்கள் மானுடவியல் ரீதியில் ஆதாரமற்றவை.மக்களின் பண்புகள் அவர்களின் வாழ்நிலையில் கட்டமைப்படுபவையே தவிர பிறப்பிலேயே உயிரியல் ரீதியில் முன்பே நிர்ணயிக்கப்பட்டவையல்ல.

வரலாற்றில் முன் எப்போதோ நிகழ்ந்த அநீதிகட்கு ,பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பழியெடுக்க வேண்டுமெனச் சபதம் செய்வது, அக்காலத்தின் வரலாற்றுப் போக்கை மறுத்து திருத்தம் செய்ய முயல்வதாகும்.

ஒரு காலகட்ட தனியுடமை அமைப்பின் மனித இழிவுகட்கு இன்றைய மனிதர்களின் ஒரு பிரிவைப் பொறுப்பாக்குவது ஒட்டு மொத்த சமுதாயச் செயற்பாட்டின் இயக்கத்திலிருந்து அவர்களை தனியே பிரித்துக் காண்பது தவறாகும். குற்றம் நிறைந்த தனிச் சொத்துடமை அமைப்பை எதிர்ப்பின்றி விட்டு வைத்துக் கொண்டு, அதனால் இயக்கப்படும் மனிதப்பிரிவுகளையோ தனிமனிதர்களையோ விசாரணை செய்யமுயல்வது சமூக இயக்கப் போக்கை மதிப்பிடாதவர்கட்கு மட்டுமே முடிந்த காரியமாகும். சாபம் தருவதோ, சபிப்பதோ ,தீர்வு அல்ல !;உயர்வு, தாழ்வு பற்றிய கருத்துக்கள் நல்லன கெட்டவை பற்றிய பகுப்புக்கள் யாவும் சமூகத்தின் பொருளாதார உற்பத்திப் போக்கின் நலன்களில் இருந்தே வருகின்றது. குற்றம்கள் ஏனைய மனிதர்களை இழிவு செய்தல் அடிமைப்படுத்தல் என்பன ஏதோ தனிமனித மனம்களில் இருந்து உதித்து வருவதில்லை. சாணக்கியர் முதல் மனு வரை அக்காலகட்ட அரசியல்,சமூக பொருளியல் கட்டளைகளையே நிறைவேற்றினர்.கடந்த காலத்தை நாம் செப்பனிடமுடியாது. மாறாக ,கடந்தகாலப் போக்குகளை ஆய்ந்து எதிர்கால, நிகழ்கால,சமூக மாற்றங்கட்கு கீழ்ப்படுத்த வேண்டும்.

 மனிதர்களின் அக அம்சங்கள் உள்மன உலாவல்கள் புறநிலையாக நிலவும் சமூகவாதிகளின் கருத்துக் கட்டளையிடலாகும். அநீதிகளை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை இயங்கவிட்டுக் கொண்டு அந்த இயக்கத்துக்கு உட்படும் மனிதர்களை மட்டும் குற்றம் குறை காண முடியாது.
 
 
ஒரு மக்கள் பிரிவுக்கு எதிராக பகைமையுணர்வுகள், பழியெடுக்கும் சபதம்கள் இந்தியாவின் தேசம் தழுவிய ஒன்றிணைதல் தொடங்க பிரதான தடையாக இருந்தது.

திராவிட நாகரீகம் ஆரியத்தை விட உயர்ந்தது. அங்கு கடவுள் இல்லை , சாதி கிடையாது, பிராமணியம் நிலவவில்லை என்ற வரலாற்று ஆய்வுக்குட்படாத செய்திகள் சரித்திரத் தகுதி பெற்று உலாவின. புராண, இதிகாசப் பாத்திரம்கட்கு உயிர் தரப்பட்டு ,அவர்கள் திராவிட மற்றும் ஆரியக் கருத்துக்களுக்கான போராளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். திராவிட நாகரீகத்தில் செல்வந்தர்கள், ஏழைகள், மதகுருக்கள், உலோகத் தொழிலாளர்கள், சுதந்திரமற்ற அடிமைகள் இருந்ததை மறைத்தனர். அவ்வாறே, ஆரியரும் தம் வளர்ச்சியல் கடந்து வந்த மானுடவியல் உண்மைகள் நிலவவில்லை என்று மறுத்தனர்.

திராவிட கருத்தியலானது ‘லெமூரியா’,குமரிக்கண்டம்,குமரி நாடு, ஏழ் கடல் நாடு, ‘தென்குமரி முதல் வடவேங்கடம் வரை’ பரவிய தமிழ்நாடு என்ற தமிழ்த்தேசியவாதக் கனவுகளை பின் தொடர வைத்தது.

தமிழ்நாட்டு தேசியமானது திராவிடத்தின் குழந்தையாகும். இந்தியா என்பது பலவித சாதி,சமய, இனக்குழு, சமூகப் பிரிவுகள், மொழிகளின் நாடாகும்.

இவைகளிலே பிளவும் ,முரண்களும் ,சச்சரவுகளும் நிலவவே செய்யும் என்பதன் பொருள் ,அவர்களிடையே பொதுவான வர்க்க ரீதியிலான அம்சம்களும் உடன்பாடான சமூகப் போராட்டத் தேவைகளும் நிலவாது என்பதல்ல.

அந்நிய பிரிட்டிஸ் ஆட்சியை எதிரிடத்தக்க பலத்தை தம்மிடையே திரட்ட கடமைப்பட்ட இந்தியர்களாக உருவாகி வந்த மக்களை பிரிட்டிஸ் அரசு ஆரியர், திராவிடர், தலித்தாக மட்டுமல்ல, இந்துவாக, சீக்கியர், முஸ்லிம், பௌத்தர்களாக கூறு போட்டுக் கையாண்டது. அந்தப் பிரிவுகளிடையே தனித்தனி தலைமைகளை உருவாக்கி தன் கீழ் கையாண்டது.

திராவிடத் தமிழ்ப் பெருமைகளைத் தேடி தமிழ்தேசியவாதிகள் எகிப்து, பாபிலோனியா, பேர்சியா, கிறீஸ், மத்தியதரைக் கடற்பிரதேசம் எங்கும் பயணித்தார்கள். இலங்கையில் பண்டிதர் கணபதிப்பிள்ளை "அலெக்சாண்டர் ஒரு தமிழன் " என்று கண்டு பிடிக்க ,தமிழ்நாட்டில் பெருஞ்சித்திரனார், ம.பொ.சி,ஆதித்தனார் போன்றவர்கள் இதையொத்த கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தினர்.இவர்கள் ஏகாதிபத்திய பிரிவினை அரசியலுக்கான சிறந்த இரைகளாக இருந்தனர். சுமேரிய, எகிப்து நாகரீகம்கள் திராவிட நாகரீகம் எனவும் இந்த நாகரீகம்களின் மூலம் தமிழர் நாகரீகமே என்ற விளக்கம்களும் உலாவின. இவைகளின் வரலாற்றுப் பெறுமதிகள் பற்றி தமிழ்தேசியவாதிகள் கவலையுறவில்லை.

தமிழ்நாட்டுத் திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை, மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர்.

ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும் ,திராவிடச் சிந்தனையாளர்கள் ஆரியரையும் நடத்த விரும்பினர். தென்னிந்திய திராவிடவாதிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஜெர்மனிய நாசிகளைப் போல் ஆரியர்கட்கும் ,பிராமணர்கட்கும் வதைமுகாம்களை அமைக்குமளவு தயாராக இருந்தனர்.திராவிடப் பெருமை, திராவிட தேசம் பேசிய பெரியார் கூட ஆரியரை, பிராமணர்களை எதிர்த்தாரே தவிர வெள்ளை ஆரியரான பிரிட்டிஸ்காறரை எதிர்க்கவில்லை. மாறாக, அவர்களின் நாகரீகம், பகுத்தறிவு, விஞ்ஞானம் இவைகளைப் புகழ்ந்து இந்திய விவசாய சமூகத்தின் பின் தங்கிய நிலைமைகளை நையாண்டி செய்தார்.

மேற்கு நாகரீகம் தொழிற்துறை வளர்ச்சியின் விளைவு, தொழிற்புரட்சியின் முன்பு ,பிரிட்டன் கூட இந்திய நிலைமைகளையொத்த சமூக நிலைமையையே கொண்டு இருந்தது என்று இவர்கள் கண்டாரில்லை. இந்தியப் பிராமண மதகுருக்களை போல் ஜரோப்பாவில் பாப்பரசர் கிறிஸ்தவமத குருக்களைநியமிப்பது போல் மன்னர்களையும் நியமித்தனர். பல சமயங்களில் வரி செலுத்தாத மன்னர்களின் நாட்டை அடமானமாகப் பெற்றார்.மன்னார்கள் இல்லாத போதும் ,மன்னராக இளவயது சிறுவர்கள் இருந்தபோதும் பாப்பரசரே நாட்டை நிர்வகித்தார். தன்னை எதிர்த்த மன்னர்களை விலக்கினார்.அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு மக்களை கிறீஸ்துவின் பெயரால் தூண்டினார். தனது சார்பான புதிய மன்னர்களை நியமித்தார். நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றார். பகை நாடுகள் மீது படையெடுத்தனர். ஏனைய நாடுகளை அந்த நாடுகள் மேல் படையெடுக்கும்படி தூண்டிவிட்டார். புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாறிய நாடுகளிலும் ,தமது பகை நாட்டிலும் ஞானஸ்நானம், திருமணம், சாவு, அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான கிரிகைளை அவர் மறுத்தார்.

திருச்சபை உத்தியோகம்கள், பதவிகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.
 
மதகுருக்கள், நிலபுல சொத்துக்களை வைத்து இருந்தார்கள். அந்த நிலம்களில் ஏழைகளும், அடிமைகளும் உழைத்தார்கள். சந்தைகளில் அக்காலத்தில் மனிதர்கள் ஆடு,மாடுகள் போல் விற்று வாங்கப்பட்டனர். அடிமைகள், தியோர்கள் (Theows)என்று அழைக்கப்பட்டனர். ஏழைகள் கடனைத் திருப்பித் தர முடியாத விவசாயிகள் தம்மைத் தாமே நிலப் பிரபுக்களிடம் விற்றுக் கொண்டனர். பிரிட்டனில் கி.பி.1000 இல் அடிமையகளே சந்தைகளில் முக்கிய விற்பனைப் பண்டமாக இருந்தனர். தப்பியோடும் அடிமைகள் திருடும் அடிமைகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். அடிமைகளைக் கொல்ல உரிமை இருந்தது. குற்றம் செய்தவர்களை தீயை ஏந்தச் செய்தல் ,நீரில் மூழ்கச் செய்தல் ஆகியவை ஊடாக குற்றமற்றவர்கள் என நிரூபிக்கக் கோரும் நீதிசார் நடைமுறைகள் ஐரோப்பாவில் இருந்தன.

மதகுருக்கள், படைத்தலைவர்கள்,அரசுப் பிரதிநிதிகள், செல்வந்தர்கட்கு அரசன் மானியமாக வழங்கிய நிலம் " Bochland "என்று அழைக்கப்பட்டது.

இந்த நிலம்களில் விவசாயிகள் குத்தகைக்கு உழைத்தார்கள்.

 குத்தகையாக விளைபொருள் தராத விவசாயிகளைக் கொல்லும் உரிமை நிலவுடமையாளனுக்கு இருந்தது.கிறீஸ்தவ திருச்சபைகள் தமது சொந்த நீதிமன்றம்களைக் கொண்டிருந்தன. இங்கு கிறீஸ்தவத் திருச்சபை சார்ந்த குற்றவாளிகளை இவை விசாரித்து அரச நீதிமன்றம்களை விட மிகவும் குறைவான தண்டனையே வழங்கின. உதாரணமாக, அரச நீதிமன்றம் கொலைக்கு மரணதண்டனை வழங்கியபோது திருச்சபை நீதிமன்றம் கொலைக்கு தமது திருச்சபை ஆட்களை கிறீஸ்தவ மதச் சின்னம்கள் ,மத ஆடைகளை களைந்து விடும்படி மட்டுமே தீர்ப்பளித்து.

பாவம்களைச் செய்த பாவிகளிடம் இருந்து, கிறிஸ்தவ மதகுருக்கள் பணத்தைப் பெற்றுக கொண்டு பாவம்களை போக்கும் பொருட்டு ‘பாவமன்னிப்பு சீட்டுக்களை’ வழங்கினர். இப்படியாக, செய்த பாவம் போக்கப்பட்டுப் புண்ணியம் விலைக்க வாங்கப்பட்டது. பாவ மன்னிப்புச் சீட்டுக்களை விற்பதற்காக ஐரோப்பா எங்கும் பாப்பரசரின் கிறீஸ்தவப் "பாவம் போக்கிகள் " அலைந்த திரிந்தார்கள்.
 
 
கி.பி. 1539 இல் பிரிட்டனில் கத்தோலிக்க மதத்தைக் காக்க ஆறு விதிகட்கான சட்டம் (The statute of six Articles) கொண்டு வரப்பட்டது.இதன் மூலம் கத்தோலிக்க கொள்கைகளை நம்பாதவர்களை உயிரோடு எரியூட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கிறிஸ்தவ வழிபாட்டின்போது படைக்கப்படும் ரொட்டியும், வைனும் கிறீஸ்துவின் தசையும் இரத்தமுமாகும் என்பதை நம்ப மறுப்பது ,தெய்வ நிந்தனையானது. இஃது,கத்தோலிக்க எதிர்ப்பாக்கப்பட்டு மரணத்துக்குரிய தண்டனையானது !

14ம் நூற்றாண்டில் வெடிமருந்து கண்டு பிடிப்புக்குப் பின்பு பீரங்கிப்படைகள் உருவாகின.சண்டையிட்டன. கி.பி. 1600 இன் பின்பே பிரிட்டனில் வெளிநாட்ட உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்தது. நகரம்கள் எழுந்தன. துறைமுகங்கள் கப்பல்கட்டும் தொழில்கள் வந்தன. 1525 இல் வில்லியம் டிண்டேல்; (William Tyndale) பைபிளை லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். அதன் பின்பே ஆங்கிலமொழி வளர்ந்தது. கலைகள், இலக்கியம், அறிவுத் துறைகள் வளரத் தொடங்கின. இங்கு தொழில் மயமாதலின் விளைவாகவே வர்த்தக வளர்ச்சி காரணமாகவே இவை நிகழ்ந்தன. அடிப்படையில் இந்திய பிரிட்டிஸ் சமூகங்கள் அக்காலத்தே கிட்டத்தட்ட ஒரே மட்டத்திலேயே இருந்தன.

ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சி தான் மேற்குலகை மாற்றியது.இந்தியாவின் உடன் கட்டை ஏறும் முறைபோல ஐரோப்பிய ‘விக்கிங்கர்’ மக்கள் பிரிவிடம் ஆண் இறக்கும்போது பெண்ணையும் அவனுடன் சேர்த்து எரிக்கும் பழக்கம் நிலவியது. எனவே, இந்து சமயத்தையோ பிராமணியத்தையோ இதுவரை மனிதவரலாற்றில் இல்லாத கொடுமைகளைக் கொண்டிருப்பதாகக் கற்பிக்க முடியாது. பல ஆயிரம் வருடம் மாறாத சமூகமாக இந்தியா இருப்பதே இதற்குக் காரணம் ,மறுவகையில் இந்தியாவானது பேர்சியா,பபிலோனியா, எகிப்திய நாகரீக மிச்சம்களையும் நினைவுகளையும் கொண்டுள்ள ஒரு சமூகமாகும்.

இந்திய சமூக இருப்பை வரலாற்று மற்றும் மானுடவியல் ரீதியில் அணுகாமல் அதன் மிகப் பின் தங்கிய பொருளாதார உற்பத்திமுறைகளோடு இணைத்து ஆராயாமல் வெறும் ஆரிய,பிராமண வெறுப்புக்களால் எதிர்கொள்வது காலம் கடந்த பெரியாரிய,அம்பேத்காரிய அரசியல் சரக்குகளாகும்.

இந்திய முழுச் சமூக அமைப்பும் சோசலிசத்துக்குள் வரும்வரை இந்திய சமூகக் கொடுமைகளை ஒரு போதும் முழுமையாக ஒழிக்கமுடியாது என்பதே இந்திய அரசியல் சமூகப் போக்குகள் திரும்பத்திரும்ப நிரூபிக்கும் விடயமாகும்.
 
இந்தியாவின் சகோதர மக்கள் பிரிவுகளிடையேயுள்ள அநீதிகள் முரண்பாடுகள் என்பன வர்க்க சமூக ஒழுங்குகட்குட்பட்டவை. சாதிகள் என்பன வர்க்க சமூகத்தின் வெளித்தோற்றமாகும். பல்வகையான தொழிற் பிரிவினைக்குட்பட்ட  உழைப்பாளர்களின் பிரிவாகும். சாதிகளை வர்க்க சமூகத்தின் அம்சமாகப் பார்க்க மறுத்தவர்களது மதிப்பீடுகள் இன்று பொய்த்துப் போய்விட்டன.

பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனையன்றி உள்ளுரில் சொந்த தேச மக்களை ஆரியர்- திராவிடர் என்ற வரலாற்றுக் கற்பிதங்களுடன் இப்போக்குகள் இந்திய சுதந்திரத்தின் பின்பு, நாட்டுப் பிரிவினை வடக்கு, தெற்கு பேதம் ,வடவர்- தென்னவர் சார்ந்த தீராத சச்சரவுகட்கு இட்டுச் சென்றது.

 இவர்கள் ஏதோ ஒரு வகையில் மேற்குலக சக்திகளின் அரசியல் நிதிக் கட்டளைகட்கு உட்பட்டே செயற்பட்டனர். இந்தியாவின் முன்னேற்றமற்ற பழைய விவசாய சமூக அமைப்பில் உள்ளுரின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியவில்லை. பலவிதமான சமூகப் பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலகம் செய்ய வாய்ப்புகள் நிலவியது என்ற போதும் மறுபுறம் ,இந்திய மக்களின் பல வண்ணப் பண்புடைய போக்குகள் பகை மட்டுமே நிரம்பியவையாகக் காண்பிப்பது திராவிட – ஆரிய பிரிவினைவாத சக்திகட்கு அவசியமாக இருந்தது. இவை ஒரு தேசமாக பொதுப்பண்புகளை நோக்கி வளரத்தக்க வரலாற்றுக்கட்டத்தில் இருந்தன.

இன்று, வளர்ச்சியடைந்த எல்லா முதலாளித்துவ நாடுகளும் இத்தகைய பல இனக்குழுத்தன்மை வாய்ந்த வித்தியாசமான ஏற்றத்தாழ்வான போக்குகளிலிருந்து முன்னேறி வந்தவையே. ஆரியர் – திராவிடர் பல ஆயிரம் வருடங்களாக ஓயாது ,ஒழியாது போரிட்டனர் என்ற வரலாற்றுப் புனைவுகள் தான் " ஒருவரையொருவர் பழியெடுக்க முயலும் இந்த இரண்டு பிரிவுகட்கும் " ஆதாரமாகும் ;இந்தியாவின் சகல துன்புறும் மக்கள் பிரிவுகளும் ஒன்று சேராமல் இந்தச் சிந்தனைகள் பார்த்துக் கொண்டன என்ற அளவில் ,இவர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு சிறப்பான சேவை புரிந்தார்கள்.
 
இந்திய ஆரியக்கருத்துக் காவிகள் இந்தியாவுக்கு முதலாளிய வழயில் கூட ஒரு போதும் தேவைப்பட்டிராத யூத எதிர்ப்பைக் கொண்டிருந்ததுடன் ,கிட்லரையும் ஜெர்மனியப் பாசிசத்தையும் வெளிப்படையாகவே ஆதரித்தனர்.

தாம் ,ஐரோப்பிய ஆரியருடன் சேரும் ஒரே இனம் என்று நம்ப இவர்கள் கற்பிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் திராவிட மற்றும் தலித்திய வெறுப்புக்களைக் கொண்டிருந்ததுடன் ஆரியரின் மதம் என்று தாம் கருதிய "இந்து மதம் " ஊடாகச் சகலரையும் அதனுள் உள்ளடக்கி விட முயன்றனர். இவர்களின் பொது அம்சமாக சோசலிச எதிர்ப்பு இருந்தது. இவர்கட்கு எதிர் நிலையில் செயற்பட்ட பெரியார்,அம்பேத்கார் போன்றவர்கள் தாம் சார்ந்த மக்களை சோசலிசத்தின் பக்கம் போகாமலும் ,பிரிட்டிஸ் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரை முன்னேறாமலும் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு, இவர்கள் ஆரிய எதிர்ப்பை இடதுசாரிச் சாயலுடன் வெளிப்படுத்தினர்.

இந்த இரு பிரிவும் பல நூறு மில்லியன் கணக்கான ஏழைகளாலும் உழைப்பாளர்களாலும் நிரம்பிய இந்திய மக்களை இணையவிடாமல் செய்தனர்.

மனிதப்பண்பாட்டு அம்சங்களை, உயர்வு தாழ்வு முறைகளை, தீவிரமாய் பேசியதின் ஊடாக மக்களின் பொருளாதார அம்சங்களை அதை வெல்வதற்கான வழிவகைகளைப் புறம் தள்ளிவிட்டனர். இன்று, தமிழ்நாட்டில் பெரியாரியம், தலித்தியம், பின் நவீனத்துவம், காந்தீயம், திராவிடம், இந்துமதம் பேசிய எல்லோருமே சுற்றிச்  சுற்றி மேற்குலக அரசியல், கருத்தியல், பொருளாதார ஆர்வம்கட்கு உட்பட்டவர்களே. பல தொகை மேற்குலக  NGO  க்கள் இவர்களுடன் உறவு கொண்டுள்ளமை இதற்கு வெளிப்படையான சான்று!; 1990 இன் தொடக்கத்தில் பெரியார், அம்பேத்கார், காந்தியம்,பின் நவீனத்துவம், தலித்தியம் பற்றி பெரும் தொகை ஆய்வுகள், நூல்கள் வெளிவந்தமையும், இதற்கான அமைப்புக்கள் புத்தமைக்கப்பட்டமையும், இடதுசாரி அமைப்புக்களின் இடத்துக்கு இவை பதிலாக நிறுவ முயற்சிக்கப்பட்டமையும் ஏதோ நினையாயப் பிரகாரமாக நடந்தேறவில்லை. உலகம் முழுவதும் மேற்குலகு சார்பான கருத்துக்கள் முன்னேறிக் கொண்டிருந்தபோதே இவை நடந்தன.
 
ஸ்டாலினிசக் கட்சிகளில் இருந்து வெளியேறிய அரசியல் உதிரிகள் இப்போக்குகளில் முன்னணியில் இருந்தனர். NGO நபர்களாக மாறுவதற்கான கல்வித்தகைமை, ஆங்கில மொழியறிவு நடுத்தவர்க்க சமூகப் பின்புலம் என்பன அவர்கட்கு தோதாக இருந்தது. இவர்கள் கலகக்காறர்களாகவும், கட்டுடைப்பாளர்களாகவும், புத்தமைப்பாளர்களாகவும் தோன்ற முயன்றனர்.

இவர்கள் உலக மயமாதலுள் நுழைந்த இந்திய முதலாளித்துவத்துக்கு ஏற்ற கருத்தியல் தயாரிப்பை வழங்க முயன்றனர். உலக மயமாதலில் நேரடியாகப் பயன் பெறத் தொடங்கிய புதிய சமூகப் பிரிவுகளின் பேச்சாளர்களாக மாறினர். இவர்கள் பெரியார், அம்பேத்கார், காந்தி போன்றவர்களை புனரமைத்தனர். புதிய வாதம்களால் நிரப்பினர் என்பது மறுபுறம் இந்தியா தழுவிய ஒரு புதிய முதலாளிய வளர்ச்சிக்கு எதிரான மேற்குலக நாடுகளின் விருப்பார்வமாகவும் இது இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல பெருமளவு 3 ம் உலக நாடுகளில் பலவித சமூகக்குழுக்களை மேற்குலக நாடுகள் அரசியல் வாழ்வுக்கு கொண்டு வந்த சமயமாக அது இருந்தது. NGO க்களின் சகாப்தம் தொடங்கிய தருணம் அது தான். இவை இடதுசாரிகள், சமூக விடுதலை அமைப்புக்கள், கொரில்லா இயக்கம்களின் பலம்களையும் குறைக்க முயன்றன. அவர்களின் இடம்களைக் கைப்பற்றின.


 தமிழ்நாட்டில் தியாகு, திருமாவளவன், அ.மாக்ஸ்,ராமதாஸ், ரவிக்குமார் போன்ற ஸ்டாலினிசக் கட்சி மற்றும் மாவோயிச ஆயுதக்குழுக்களின் நபர்கள், சாதிய அமைப்புக்களை உருவாக்கியதுடன் இடதுசாரிச் சிந்தனைகளை ஆய்வதாய்த் தொடங்கி கடைசியாக மாக்சிய விரோதத்துக்கு வந்து சேர்ந்தனர்.




 1990 களில் மேற்குலக நாடுகளில் தோல்வியடைந்த சீர்திருத்தவாத சோசலிச அரசியல் கருத்துக்களின் உதவியுடன் மாக்சியத்தை ஆராய முயன்ற இவர்கள் , இறுதியாக, நம்பிக்கையழிவுக்கும் இவர்களது குழுக்கள் பிரிந்து உடைந்து சிதறி தனிமனிதர்களாக காணாமல் போவதற்கும் வழியானது. 1990 தொடங்கி அதன் பத்தாண்டு முடிவு வரை புதிய எழுத்தியக்கம் படைத்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் இன்று, எந்தப் பயன்பாடுமற்றவர்களாக அரசியல் தனியன்களாக மாறிவிட்டனர். புகலிடங்களில் அரசியல் , இலக்கிய கலகங்களை மூட்டியவர்களாக தம்மை உரிமை கோரிக் கொண்ட இவர்கள் , இன்று, அம்பலமாகிவிட்டனர்.

இவர்கள் கைடேக்கர் ,நீட்சேயை மட்டுமல்ல மேற்குலக பாசிசத்தின் நவீன செமிட்டிக் எதிர்ப்பு வடிவம்களையும் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து இருந்தனர்.

மாக்சியம் செமிட்டிக் பாதிப்புடைய சிந்தனை என்று குற்றம் சாட்டப்பட்டதுடன்  நீட்சேயின் பாசிசத் தோற்றக் காரணிகளை மறைத்து அவனைப் போற்றினர். பாசிச சிந்தனாவாதி மாட்டின் கை டேக்கர் கொண்டாடப்பட்டார். மாற்றாக ,ஜெயமோகன் போன்ற இந்துமதவாதிகள் இவர்களின் உதிரித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு செமிட்டிக் மற்றும் மாக்சிய எதிர்ப்பும் பேசத் தொடங்கினர்.தமிழ் நாட்டில் பெரியாரியம் மற்றும் தலித்தியம் பேசியவர்கள் திராவிடர் சிந்தனைக்கு நெருக்கமானவர்களாக இருந்த போதும் மறுபுறம் மேற்கத்தைய ஆரிய மற்றும் பாசிச செமிட்டிக் எதிர்ப்புக் கருத்துக்களையும் பிற்காலத்தில் கொள்முதல் செய்து இருந்தனர் என்பது பெரும் முரண்பாடாகும்.
 
 
இன்று  திராவிடம், ஆரியம், காந்தியம் என்பன இந்தியப் பொது முதலாளிய வளர்ச்சியுள் நவீன மயமாகும் தொழிற்துறையுள் கலந்து உருகத் தொடங்கிவிட்டன. இவைக்கு எதிர்காலமில்லை. திராவிடம் என்பது தென்னிந்திய திராவிட மக்களை ஒன்றிணைப்பது என்று தொடங்கிப் பின்பு, தமிழ்நாட்டில் திராவிட இயக்கமாக, பெரியாரியமாகக் குறுகி இன்று, இவை பாராளுமன்ற வாதக் கட்சி அரசியலில் கூட வழக்கொழிந்து வருகின்றன.

திராவிட இயக்கம்கள் இன்று, இந்திய தேசியப் போக்குள் ஈர்க்கப்பட்டு கலந்துவிட்டன. தமிழ்நாட்டு திராவிட இயக்கவாதிகட்கு வெள்ளை மற்றும் கறுப்புத் திராவிடர்கள் இருப்பது தெரியாது. இவர்கள் இந்தியாவுக்கு வெளியல் உள்ள திராவிடராகக் கருதப்படுபவர்களை எண்ணுவதில்லை. செமிட்டிக் மற்றும் மங்கோலிய மக்கள் பிரிவுகளுடன் கூட திராவிடமொழிபேசும் மக்கள் பிரிவுகட்கு தொடர்புள்ளது என்பதால் ‘உலகத் திராவிடர்களே ஒன்றிணையுங்கள்’ என்றா இவர்கள் கேட்கமுடியும். திராவிடப் பெருமை என்பது ஆரியப் பாசிசச்  சிந்தனா முறைக்குச் சமமானதே. திராவிடர்கள் ஆரியரால் ஒடுக்கப்படுகின்றனர் என்ற கருத்து வரலாற்றின் அறியாக் காலத்துக்கு உரியதான ,சான்று தர முடியாத கருத்துக்களைப் பின் தொடர்வதாகும்.
 
 
‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற ஏகாதிபத்திய கருத்தியல் அப்படியே நாவலனால் எடுத்துக் கையாளப்படுகின்றது.

 இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மேற்குலக யுத்தத்திற்கு ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தனிமைப்படுத்தும் அரசியல் சித்தாந்தம் பாவிக்கப்படுகின்றது.மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கட்கு இப் பெயர் தரப்படுகின்றது. ஈராக்கிலும் ,ஆப்கானிஸ்தானிலும் ,ஈரானிலும் மேற்குலக அரசை எதிர்த்து போராடும் சக்திகட்கு இப்பெயர் இடப்படுகின்றது.

ஒரு அரசியல் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடைய இயக்கம் இப்படியாக மதவாத விளக்கம்களால் மட்டும் நிரப்பப்பட்டது. இஸ்லாம் எதிர்ப்பு இயக்கம் என்பது அரபு மக்கள் எதிர்ப்பு இயக்கம்களாகவும் இனவாத ஐரோப்பிய மேன்மை பேசும் அமைப்புக்களாகவும் இருந்தன.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புதிய நாசி இயக்கம்கள் இப்போ யூதர்களை விட இஸ்லாமையும் முழு முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களாக மாறியுள்ளனர். ஆபிரிக்க,ஆசிய முஸ்லிம்கள் மதவெறி கொண்ட கீழ்நிலை மனிதர்களாக அழித்தொழிக்கப்பட வேண்டிய மக்கள் பிரிவாக மாற்றப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் அரசு மட்டுமல்ல புதியநாசி அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய "PROD" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அன்றைய யூத எதிர்ப்பு இன்று இஸ்லாம் எதிர்ப்பாக மாறியுள்ளது. ஊடகம்களில் பெரும் தொகையான இஸ்லாம் எதிர்ப்புச் சொற்கள் புழக்கத்துக்கு வந்துள்ள தினசரி புதிய ‘இஸ்லாம் மேலான விமர்சகர்கள்’ (Islamkritiker) தோன்றுகின்றார்கள். இணையத்தளம் முதல் பத்திரிகைகள் வரை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுதாரிகள், குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமண வழக்கம்களை உடையவர்கள் என்று உருவகிக்கின்றன. புதிய நாசி இணையத்தளம்களில் அரபுக்கள் பன்றிகளையொத்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கு இடப்பட்ட பெயராகும்.
 
 
இதனுள் உலகின் பலநூறு மில்லியன் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள்.

உலகில் நடைபெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்களை எல்லாம் மதத்தின் பெயரால் அடையாளப்படுத்த முடியுமா?

புஸ் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதி என்று ஏன் கொள்ளப்படுவதில்லை?

ஐரோப்பியக் கூட்டமைப்பை ஒரு கிறீஸ்தவக் கூட்டமைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாதா?; பிரிட்டனின் அயர்லாந்து மேலான ஒடுக்குமுறையை புரட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் போராட்டமாக நாம் விளக்கமுடியாதா?

தலாய் லாமாவின் சிந்தனைகள் ஏன் பௌத்த மத அடிப்படைவாதமாய்க் கொள்ளப்படுவதில்லை? ; தமிழ், சிங்கள பிரச்னையை ஏன் பௌத்த, இந்துமத அடிப்படைவாதம்கட்கு இடையேயான போராட்டமாய் விளக்கப்படுவதில்லை?

ஒரு அரசியல் போராட்டத்தின் விளைவுகளே இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று மேற்கு நாடுகளால் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. மதம் என்ற அளவில் கிறீஸ்தவம் இஸ்லாம், யூதநம்பிக்கை யாவுமே கிட்டத்தட்ட ஒரே மூலத்தில் பிறந்த ஒரே சாயல்படைத்த மதம்களாகும்.

மதம்கட்கு உள்ள பிற்போக்குத்தன்மை, மனித விரோதப் பண்புகள் எல்லா மதம்கட்கும் பொதுவானவை. பைபிள் புனிதமானது அதன் தழுவலாகப் பிறந்த ‘குர்ரான்’ கொடியது என்ற வகுத்தல்கள் மேற்குலக அரசியலின் படையலாகும்.

இஸ்லாமிய இயக்கம் வரலாற்றில் தீவிரத்தன்மை பெற்ற காலம்களை நாம் பார்த்தால் அது மேற்கு நாடுகளின் அரசியல்,இராணுவச் சதிகளின் விளைவாகவே இருந்தது. முதலாம் உலக யுத்த சமயத்தில் ஜெர்மனி,அரபு முஸ்லிம்கள் மத்தியில் பிரிட்டன் பிரான்சுக்கு எதிராக ‘புனித யுத்தம்’ எனப்படும் இஸ்லாமிய மதவாத அமைப்புக்களை உருவாக்கியது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக பிரான்சும் மேற்குநாடுகளும் அங்கு இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கினர்.
 
 
ஆப்கானில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் PLO வுக்கு எதிராக இஸ்ரேல்’ஹமாஸ்’ இயக்கத்தை தொடங்கியது. பாகிஸ்தான், காஸ்மீர்,சீனா, லிபியா ,முன்னாள் யூகோஸ்லாவியா எங்கும் மேற்குலக உளவுத்துறைகள் இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கிpன. இவர்களே குரான் போதிக்கும் இஸ்லாமியப் பள்ளிகளையும் உருவாக்கினர். அப்படி எதிர்ப்புரட்சி சக்திகளான இஸ்லாமிய இயக்கம்கள் உலக மயமான பின்னர் மத்திய கிழக்கு எண்ணெய் வளம்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தோடு பிணைந்த பின்பே ஏகாதிபத்திய எதிர்ப்பு குணத்தைப் பெறுகின்றன.

இஸ்லாமிய இயக்கம்கள் என்பது ஆசிய,ஆபிரிக்க மக்களின் ஒரு பிரிவின் மேற்குலக எதிர்ப்பு இயக்கமாகும். 1990 முன்பு இந்த முஸ்லிம்அமைப்புக்ககள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் இருந்தன. கொம்யூனிச எதிர்ப்பும் உள்நாட்டில் ஜனநாயக எதிர்ப்பையும் சர்வாதிகார அரசியலையும் கொண்டிருந்தவையாகும். இன்று ஆசிய,ஆபிரிக்க எரிபொருள் வளம்களை காக்கும் இயக்கம்களாக உள்ளன. இந்த எழுச்சி தனி நாடுகளில் அல்ல ஒரு மில்லியாடனுக்கும் மேற்பட்ட மக்களின் இயக்கமாக உள்ளது. 3ம் உலக வளம்கள், தொழிற்துறை சார்ந்த போக்குகள் இதனால் பலமடைகின்றன. மேற்கு நாடுகள் எவ்வளவுக்கு கொடூரமான சக்திகளாகி மாறி யுத்தப் பயங்கரவாதம் செய்கின்றனவோ அந்த மட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கம்களும் கொடூரமாக மாறுகின்றன.

இஸ்லாமிய இயக்கம்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றைக் கண்டறியாத 3ம் உலக சமூகம்களில் இருந்து உருவானவை என்பதால் இனக்குழுத்தன்மை வாய்ந்த தீவிரமான குணாதிசயம்களை வெளிப்படுத்துகின்றன. இப்பிராந்தியம்களில் தொழிற்துறை முன்னேற்றம் வளரும்போது இஸ்லாமிய இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கும் மேற்குலக ஆதிக்கம்கள் முஸ்லிம் நாடுகள் மேல் குறையக் குறைய இந்த இயக்கம்கள் ஏனைய முதலாளிய ஜனநாயக அமைப்புக்கட்கும் தொழிலாளர் அமைப்புகட்கும் வழிவிடவேண்டிய வரும்.
 
 
இங்கு, நாவலன் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுகிறாரே ஒழிய கிறீஸ்தவ, பௌத்த,யூத அடிப்படைவாதம்களை அவர் பேசவில்லை.

ஏகாதிபத்தியம்களை எதிர்க்கும் அமைப்புக்களை அது தற்காலிமாக இருப்பினும் கூட நாம் ஏகாதிபத்தியம்களோடு ஒன்று சேர எதிர்க்கக்கூடாது. பலம் பொருந்திய பிரதான எதிரிக்கு எதிராய்ப் போராடும் எமது பலமற்ற எதிரிகளை எதிர்ப்பதென்பது மேற்குலக ஒடுக்குமுறையாளர்களை ஆதரிப்பதில் தான் கொண்டு போய் விடும்.

இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற கருதுகோளே மேற்குலக பிரச்சாரகர்களாக மாறுவது தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பேசும் நாவலன்  திபேத்திலும், பர்மாவிலும் உள்ள பௌத்த அடிப்படைவாதத்தைப் பேசவில்லை என்பது அவரது சிந்தனையொழுங்கு பற்றிய பிரச்னையாகின்றது.

தலாய்லாமா, பின்லாடன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை மத அடிப்படைவாதம் என்றால் பின்லாடனின் மதவாதம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடையது என்பதுடன் மேற்குலக கூலியான தலாய் லாமாவை விட உயர்வானது.
                               
இங்கு, மிகவும் மேலோட்டமானதும் எளிமைப்படுத்தப்பட்ட சுலோகம்களில் அவர் சிக்கியுள்ளதைக் காண்கின்றோம். இந்தியா மிகவும் மந்த கதிபடைத்த உலகின் பழமையான விவசாயப் பண்புகளையும் ,உற்பத்தி வடிவம்களையும் கொண்ட நாடாகும்.

பிரிட்டனின் வரவு என்பது இந்திய நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பை முழுமையாக அழிக்கவில்லை. அது, மன்னர்களையும், ஜமீன்தார்களையும் கொண்டு அதை நிர்வகித்தது, மறுபுறம், பல நூறு மக்கள் பிரிவுகள், இனக்குழுக்கள், மொழி மற்றும் பிரதேசப் பிரிவுகள் உடைய மக்களை ஒரே இந்தியாவாக பிரிட்டிஸ் இணைத்தது. ஒரே விதமான சட்டம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தெருக்கள், வாகனம், புகையிரதம் ஆகியவைகளைக் கொண்டு வந்தது. ஒரு மத்தியப்படுத்தப்பட்ட பலமான அரசை உருவாக்கியது. நாடு தழுவிய தொடர்பும் நாணயம், வரிமுறைகளையும் ஏற்படுத்தியது; ஒரு புறம் பிரிட்டன் இந்தியாவின் பழைமையை அழித்தது. மறுபுறம், புதியதாக சமூக,பொருளியல் நிலைகளை உருவாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டது.




"ஆக்கலும் அழிவும் "இணைந்தே நடந்தது. இந்தியாவில் பரவலாக நகரம்கள் உருவானது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி வர்த்தகம் என்பன அல்லாமல் ஏற்பட்டிருக்கமுடியாது. இந்தியா கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தமைக்கு சற்று முன்பாகவே பிரிட்டனில் தொழில்புரட்சி ஏற்பட்டு இருந்தன. பிரிட்டனின் இளம் முதலாளியம் பெரும் பேராசையுடன் கொலனிகளைச் சூறையாடியது ,மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது.பிரிட்டனில் இருந்து உற்பத்திப் பொருட்களை இறக்கிக் கொலனிகளில் விற்றது.

இந்தியக் குடிசைக் கைத்தொழில் உட்பட சிறு தொழில்கள் இதனால் அழியத் தொடங்கியது. பிரிட்டனின் பெரும் துணி ஆலைகளைக் காக்க இந்தியாவில் பருத்தியைக் கொண்டு மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட மஸ்லின் துணிகளின் உற்பத்தியை அழிக்க இந்திய நெசவுத் தொழிலாளர்களின் பெருவிரல்கள் வெட்டுவது வரை பிரிட்டன் சென்றது. இந்தியத்  தொழிற்துறை வளர்ச்சியை பிரிட்டனால் தாமதிக்கச் செய்ய மட்டுமே முடிந்தது. ஒரு தொழிற்துறை வல்லமை பெற்ற நாடாக இந்தியா உருவாகத் தேவையான சமூகத் தயாரிப்பு, இந்தியர் என்ற தேசிய உருவாக்கம் என்பன பிரிட்டிஸ் காலத்திலேயே உருவாகின்றது.
 
 
இந்தியாவானது பிரிட்டிஸ் காலத்தில் அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது என்ற நாவலனின் விளக்கமானது அவரின் புரிதல் சார்ந்த குழப்பத்துக்கு அடையாளம், பிரிட்டன் இந்தியா உட்பட கொலனிகளைக் கொள்ளையிட்டே தனது சொந்த மூலதனத் திரட்டலையும் ,பிரிட்டிஸின் தேசியப் பொருளாதாரம், தொழிற்துறைகளைக் கட்டிக்கொண்டது.

மறுபுறம் ,இந்தியாவானது பிரிட்டிஸ்காலத்தில் தான் தொழில் மயமாக்கலுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிரிட்டன் இந்தியாவைக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் இந்தியா தொழில்மயமாக இன்னமும் நீண்டகாலம் தனது சொந்த வழியில் வளரவேண்டி வந்திருக்கும். முதலாம் இரண்டாம் உலக யுத்த சமயத்தில் பிரிட்டனில் பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமையாலும் விலை அதிகமாக முடிந்தமையாலும் ,இந்தியாவிலும் பகுதியாக உற்பத்தி செய்தது. சில தொழிற்துறைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. பிற்காலத்தில் மேற்கத்திய மூலதனம்கள் தேசிய எல்லைகளை மீறி வளரத் தொடங்கியபோது அவை இந்தியா உட்பட நம் உலக நாடுகளில் நுழைந்தன. ஆனால் ,இன்றைய உலக மயமாதலில் இந்திய மூலதனம் தனது தேசிய எல்லைகளையும் தாண்டிக்கொண்டு 3ம் உலக நாடுகளில் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பாவிலும் நுழைவதை நாவலன் காணவில்லை என்பது அவரது பிரதான குறைபாடாகும்.
 
 
இந்தியா, சீனா இரண்டும் 21ம் நூற்றாண்டுக்கான நாடுகள் என்று "Die Zeit" என்ற ஜெர்மனியப் பத்திரிகை எழுதுகின்றது.

உலக மக்கள் தொகையில் 35 வீதமானவர்கள் இப்பிராந்தியத்தில் வாழ்கின்றார்கள் என்பதுடன் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் நாடுகளாக இப்பிரதேசம்கள் மாறிவிட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியான "ADB" யின் தலைவர் Haruhiko Kuroda ஆசியாவுக்கான பொது நாணயம், வரித்தீர்வு என்பவை பற்றிப் பேசியுள்ளார். ஜப்பானிய Yen சீன Yuan தென்கொரிய Won , இந்திய ரூபாய் இவைகட்கு மாற்றான நாணயமொன்றைக் கொண்டு வரத்திட்டம் உள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணய வங்கி இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு 3ம் உலக நாடுகளிலும் சக்தியிழந்துவிட்டது.

இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய பகுதிகளில் மட்டுப்பட்டுக் கிடந்த இந்தியா இப்போ இந்தியத்துணைக்கண்ட எல்லைகளைக் கடந்து வெளியேறி உலகு தழுவிய சந்தை, மூலதனமிடல், தொழிற்துறைகளில் மேற்குலக நாடுகளின் பிரதான போட்டி நாடாகிவிட்டது. இந்தியா, பிறேசில், தென் ஆபிரிக்கா என்பன கூட்டாக "IBSA" என்ற சுதந்திர வர்த்தக வலயத்திட்டத்தை உருவாக்கியுள்ளன.பிறேசிலுடன் கூட்டாக "Icone" என்ற ஆய்வுத்திட்டத்தை தொடங்கியுள்ளது. உயிரணுத் தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தயாரிப்பு தொழிநுட்பம், அணுத்தொழில்துறை, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் இவர்கள் ஆய்வு மற்றும் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இந்திய மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனமான Ranbaxy பிறேசில் முதல் தென் ஆபிரிக்காக வரை நுழைந்துள்ளமையால் பாரம்பரியமான ஜெர்மனிய பிரிட்டிஸ் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனம்கள் தமது சந்தைகளைப் பறி கொடுத்துள்ளன. மேற்குலகின் உயர்ந்த உற்பத்திச் செலவு அதிகவிலைகளுடன் உலக சந்தைகளில் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகளுடன் மேற்கு நாடுகள் போட்டியிட முடியவில்லை.
 
 
பிரிட்டனிடமிருந்து Ford நிறுவனத்தால் வாங்கப்பட்ட Jaguar ,land rover ஆகியவைகளை இந்திய Tata motors வாங்குகின்றது.இதேபோல் tata நிறுவனத்தின் துணை நிறுவனமான Tata steels பிரிட்டிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உருக்கு இரும்புத் தயாரிப்பு நிறுவனமான Corus ஐ வாங்கியதன் மூலம்[ Corus war ein niederländisch-britisches Unternehmen, das Stahl und Aluminium produzierte und 2007 von der indischen Tata Steel übernommen wurde. Seit dem 27. Oktober 2010 firmiert Corus als Tata Steel Europe (formerly Corus)  http://de.wikipedia.org/wiki/Corus  ] உலகின் 5 வது பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாக மாறியுள்ளது. இதே நிறுவனம் சிங்கப்பூரின Natsteel தாய்லாந்தின்  Millenium steel ஐ வாங்கியுள்ளது. இதன் மூலம் இத்தாலியின் Riva ஜெர்மனியின் Thyssen Krupp ஆகிய இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களை முறையே 9 வது மற்றும் 10 வது இடத்துக்குத் தள்ளியுள்ளது.

மற்றொரு இந்தியரின் நிறுவனமான Lakshmi Mittal தான் உலகின் மிகப் பெரும் இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனமாகும். இது அமெரிக்காவின் "Nucor"மற்றும் "USS" விடப் பெரியதாகும். லுக்சம்பேர்க்கின் "Arcelor" ஐ 2005 இல் 26 மில்லியாடன் டொலருக்கு வாங்கியதின் மூலம் [  Arcelor S.A. war bis 2006 der weltweit zweitgrößte Stahlproduzent. 2006 wurde Arcelor von dem Konkurrenten Mittal Steel Company übernommen und 2007 zu ArcelorMittal fusioniert.Am 25. Juni stimmte das Arcelor-Management einem nochmals erhöhtem Angebot von Mittal Steel in Höhe von 25,4 Milliarden Euro zu; aus Mittal und Arcelor wurde nun Arcelor Mittal, der mit Abstand weltgrößte Stahlproduzent. Arcelor Mittal wird anstelle Arcelor im Finanzindex CAC40 ab November 2006 gelistet.Das Unternehmen verfügt über rund 60 Werke in mehr als zwei Dutzend Staaten und beschäftigt rund 310.000 Mitarbeiter. Für das Jahr 2007 war ein EBITDA von 19,4 Mrd. US-Dollar angekündigt. Damit ist ArcelorMittal vor Thyssen-Krupp und der spanischen Acerinox der größte Stahlproduzent der Welt (2009 produzierte es 73,2 Mio. t Rohstahl)[2] und einer der weltweit führenden multinationalen Konzerne, 2008 auf Platz 28 der Fortune 500. http://de.wikipedia.org/wiki/Arcelor ]இது சீனா முதல் மேற்கு நாடுகள் வரை ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் ஆகிவிட்டது.

பிரிட்டன், இந்தோனேசியா,ரூமேனியா, கசகஸ்தான் உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த இந்து முதலாளி[Lakshmi Mittal_ http://de.wikipedia.org/wiki/Lakshmi_Mittal  ] ரூமேனியத் தொழிலாளர்கட்கு கிறீஸ்தவ தேவாலயம் இலவசமாய்க் கட்டித் தருகின்றான். பிரிட்டிஸ் தொழிற்கட்சிக்கு நிதி தருகின்றான். Lakshmi Mittal க்குப் போட்டியாக வந்த மற்றைய இந்திய நிறுவனமான Tata இப்போ உலகில் 50 நாடுகளில் 96 நிறுவனம்களைக் கொண்டுள்ளது. இதில் 250.000. தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரும்பு, இயந்திரத் தொழில், இரசாயனம், நுகர்பொருள், எரிபொருள்,தொலைத்தொடர்பு, உட்பட பலதுறைகளில் இது உள்ளது. இத்தாலிய Fiat , ஸ்பெயினின் ; Hispano Carrocera ஆகிய வாகனத் தயாரிப்பு நிறுவனம்களில் Tata நிறுவனம் பங்குகளை வாங்கியுள்ளது. இது Tata Motors,Tata steel , Tata consultancy எனப் பல துணை நிறுவனம்களைக் கொண்டுள்ளது. Tata CTS தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய software தயாரிப்பு நிறுவனமாகும்.

இந்தியா தனது உற்பத்தியில் 40 வீதத்தை வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 5 வருடத்தில் 12மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவின் Dong Fang,Changchun ,FAW , போன்ற வாகனத் தயாரிப்பு போலவே இந்திய Ashok Leyland ,Tata பெரிய வாகனத் தயாரிப்பில்         [ கனரக ] இறங்கிவிட்டது. இந்தியத் கைத்தொலைபேசி நிறுவனமான Bahatri தென் ஆபிரிக்க கைத் தொலைபேசி நிறுவனமான MTN ஐ 62 மில்லியன் வாடிக்கையாளருடன் வாங்கியுள்ளது.
 
 
இந்திய "HAL" நிறுவனம் அமெரிக்காவின் "Bell" கெலிகொப்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் "Bell Texto407 " என்ற புதிய நவீன கெலிகளைத் தயாரிக்க உள்ளது. இதே சமயம் ஐரோப்பிய, "EADS"வுடன் இணைந்து இந்தியாவில் "Eurocopter" என்ற கெலிகொப்டர்களை தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. பிரான்சின்  Renault வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்திய, M&M நிறுவனத்துடன் கூட்டாக வாகனத் தயாரிப்புத் திட்டம்.ஜெர்மனிய VW,BMW, கார்த்தயாரிப்பு நிறுவனம்கள் இந்தியாவுள் நுழைவு. இந்தியாவானது உலகில் சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய தொழிலாளர்களைக் கொண்ட நாடாக வளர்கின்றது. நவீன முதலாளியம் வளர்கின்றது என்றால் அதன் எதிர் விளைவாக தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் இந்தியாவுள் உருவாகி வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் சீனாவில் 109 மில்லியன் தொழிற்துறைப் பாட்டாளிகள் இருப்பர் என்றால் இந்தியாவில் அது 80 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன.

இந்தியாவில் சிறு தொழில் சிறு உற்பத்தி அழிகின்றது என்றால் பெரும் தொழிற்துறைக்கு வழிவிடவே இது நடைபெறுகின்றது. சிறுவிவசாயி, சிறு உற்பத்தியாளன், சிறுவர்த்தகர், சிறுகைத்தொழில் என்பன அழிபட்டே தீரும். சிறுவிவசாயிகள் நெசவாளர்கள் தற்கொலை செய்வது நடைபெறுகின்றது. இது முதலாளிய வளர்ச்சிப் போக்கின் விதியாகும். முன்பு வளர்ந்த மேற்கு நாடுகளிலும் இத்தகையவை நடந்தன. இறுதியாகச் சோசலிசம் வந்து முழு மக்களையும் விடுதலை செய்யும் வரை வர்க்க சமுதாயக் கட்டமைப்பைத் தகர்க்கும் வரை இந்த மனித அநீதிகளை நிறுத்த மார்க்கமில்லை.


நாவலன் ஏனைய சமகால தமிழ்ப் பரப்பு சீர்திருத்தவாதப் போக்காளர்களைப் போலவே உலக மயமாக்கலுக்கு முந்திய மதிப்புக்களில் பின் தங்கிவிட்டார்.

ஐரோப்பிய மையவாதப் போக்குகள் மேற்குலகே இன்னமும் 3ம் உலக நாடுகளைக் கட்டியவிழ்ப்பதான பழைய கருத்துக்களில் உறைந்து போயுள்ளனர். இன்றைய மேற்குலக வங்கி மற்றும் பெரு நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் 3ம் உலக நாடுகளையும் பின் தொடர்கின்றது. மேற்கு                            ஐரோப்பிய நாடுககும் ,ஐரோப்பாவும் தமது உலகார்ந்த முதன்மையிடத்தை இழந்து விட்டன. இந்த நாடுகளில் தொழிலாளர்களின் எழுச்சி, மக்கள் கிளர்ச்சிகட்கான காலம் அரும்பத் தொடங்கிவிட்டது. அதைக் காண நாம் அனைவரும் கட்டாயம் உயிருடன் இருப்போம். தமிழ்த் தேசியம் ,தமிழ்ஈழம் சமஸ்டி என்ற சகல வரலாறு கைவிட்ட போக்குகளை முழுமையாகத்  தலை முழுகவும் ,வாழும் புகலிட நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகள், சோசலிசத்துக்கான உழைக்கும் மக்களின் முழக்கம்களில் கலக்கவும் காலம் கட்டளையிடும். இது தவிர்க்கமுடியாமல் நடக்கும் தப்ப முடியாமல் நாம் முகம் கொடுப்போம்.
 
தொடரும்...

தமிழரசன்
பெர்லின்


Keine Kommentare: